பொதுவாகவே நடிகர் கமல்ஹாசன் பதிவிடும் தமிழ் ட்விட்டுகளுக்கு, பலருக்கும் அர்த்தம் புரிவதில்லை. இந்த நிலையில் நேற்றும் கவிதை போல் ட்விட்டினார் கமல்ஹாசன்.
அது…
“காந்திக்குல்லா!காவிக்குல்லா!கஷ்மீர்குல்லா!! தற்போது கோமாளிக்குல்லா, தமிழன் தலையில் . போதுமா இன்னும் வேண்டுமா? தயவாய் வெகுள்வாய் தமிழா.” – இந்த ட்விட்டில் “தயவாய் வெல்வாய்” என்கிற வார்த்தைகள்தான் அனைவரையும் குழப்பிவிட்டன. இந்த இரு வார்த்தைகளை தனித்தனியாக படிக்கும்போது புரிகிறது. ஆனால் சேர்த்து சொல்லும்போது கமல் என்ன கூற விரும்புகிறார் என்பது புரியவில்லை என்று பலரும் சமூகவலைதளங்களில் கதறினார்கள்.
இதையடுத்து தமிழில் புலமை பெற்ற ஒருவரிடம் கமல் ட்விட்டுக்கு பொழிப்புரை கேட்க முடிவெடுத்தோம். அதன்படி தமிழாசிரியர் தா.இளங்குமரனை தொடர்புகொண்டோம். இவர் நிறைகலை இலக்கியம் (எம்.ஏ. தமிழ் இலக்கியம்) படித்தவர்.
இதோ கமல் ட்விட்டுக்கு அவர் அளித்த பொழிப்புரை ( அதாவது, விளக்கம்):
“தயவாய் வெகுள்வாய் என்றால் மற்றவர்களிடம் தயவாய்… இரக்கத்தோடு கோபப்படு அதாவது… கோபப்படு ஆனால் கோபப்படாதே இரக்கத்தோடு – தயவாய் – கோபப்படு என்று பொருள்.
இப்போது கமல் ட்விட்டுக்கு முழுமையாக அர்த்தம் சொல்கிறேன்.
பலவிதமான குல்லாய்களைத் தமிழன் தலையில் மாட்டிக் கொண்டுள்ளனர். அவர்களை நாம் வெளிப்படையாக எதிர்க்க முடியாத அளவிற்கு வலிமையானவர்களாக இருக்கின்றனர். வலிமையானவர்கள் என்பதால் அப்படியே விட்டுவிடக்கூடாது. அதே நேரம் அவர்களிடம் நாம் நேரடியாகக் கோபத்தைக் காட்டினாலும் ஆபத்து எனவே சிரித்துக் கொண்டே அடி என்பது போல அன்பாகக் கோபப்படுங்கள்” என்று கமல் கூறியிருக்கிறார் என்று தெரிவித்தார் தமிழாசிரியர் தா. இளங்குமரன்.