டில்லி:

அனைத்து பொதுத் துறை வங்கிகளிலும் வேண்டுமென்றே வாங்கிய கடனை திருப்பி செலுத்தாதவர்கள் அதிகம் உள்ளனர். இதில் எஸ்பிஐ முதலிடத்தில் உள்ளது. பொதுத் துறை வங்கிகளில் கடன் கொடுத்து திருப்பி செலுத்தப்படாத மொத்த தொகையில் 27 சதவீதம் எஸ்பிஐ.யில் மட்டும் உள்ளது.

இந்த வங்கியில் மட்டும் கடந்த மார்ச் 31ம் தேதி வரை ஆயிரத்து 762 பேர், 25 ஆயிரத்து 104 கோடி ரூபாயை கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தவில்லை. இது வங்கியின் இருப்பு நிலை குறிப்பில் பெரும் அழுத்ததை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு அடுத்த இடத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளது. இதில் ஆயிரத்து 120 பேர் வேண்டுமென்ற கடனை திருப்பி செலுத்தாதவர்கள். இவர்களின் செயல்படாத சொத்துக்கள் அல்லது வராக்கடன் அடிப்படையில் 12 ஆயிரத்து 278 கோடி ரூபாய் நிலுவை உள்ளது.

இந்த இரு வங்கிகளை சேர்த்தே மொத்தம் 37 ஆயிரத்து 382 கோடி ரூபாய் நிலுவை உள்ளது. இது மொத்த நிலுவை கடனில் 40 சதவீதமாகும். அனைத்து பொதுத் துறை வங்கிகளிலும் வேண்டுமென்றே வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத தொகை 92 ஆயிரத்து 376 கோடி ரூபாய் என மத்திய நிதியமைச்சக புள்ளி விபரம் மூலம் தெரியவந்துள்ளது. இந்த தொகை 2016-17ம் நிதியாண்டின் இறுதியில் அடைந்துள்ளது.

2015-16ம் நிதியாண்டில் இந்த தொகை 76 ஆயிரத்து 685 கோடி ரூபாயாக இருந்தது. தற்போது 20.4 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே சமயம் வேண்டுமென்றே கடனை செலுத்தாதவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் சராசரியாக 10 சதவீதம் அதிகரித்து வந்துள்ளது. 2016-17ம் ஆண்டில் 8 ஆயிரத்து 915 பேரும், 2015-16ம் ஆண்டில் 8 ஆயிரத்து 167 பேரும் இருந்துள்ளனர்.

இந்த 8 ஆயிரத்து 915 பேரில், ஆயிரத்து 914 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களிடம் 32 ஆயிரத்து 484 கோடி ரூபாய் நிலுவை உள்ளது. 2016-17ம் நிதியாண்டில் எஸ்பிஐ மற்றும் இதோடு இணைந்த 5 வங்கிகள் உள்பட மொத்தம் 27 பொதுத் துறை வங்கிகள் 81 ஆயிரத்து 683 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்துள்ளன. கடந்த 5 நிதியாண்டுகளில் இதுவே அதிகமாகும். கடந்த நிதியாண்டை விட இது 41 சதவீதம் அதிகம்.

பொதுத் துறை வங்கிகள் வசம் உள்ள செயல்படாத சொத்துக்களின் மதிப்பு கடந்த மார்ச் வரை 6.41 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு இது 5.02 லட்சம் கோடியாக இருந்தது.

வேண்டுமென்றே கடனை செலுத்தாமல் ஏமாற்றுவதை தடுக்க ஆர்பிஐ பல விதிமுறைகளை வகுத்துள்ளது. கடனை செலுத்தாமல் ஏமாற்றும் தொழில் முனைவோர் முழுநேர இயக்குனராக இல்லாதபோதும் தனது பொறுப்பில் இருந்து தப்ப முடியாத வகையில் விதிமுறைகளை ஆர்பிஐ கடுமையாக்கியது.

அதற்கு முன்பு, முழுநேர இயக்குனராக இல்லாதவரை போதுமான ஆதாரங்கள் இல்லாமல் வேண்டுமென்றே கடனை திருப்பி செலுத்தாதவராக கருத முடியாது.

தற்போது, கடனை திருப்பி செலுத்த கூடிய தகுதி இருந்தும், நிதிஆதாரம் இருந்தும் வங்கிக்கு தெரியாமல் சொத்துக்களை விற்றால் அவரை வேண்டுமென்றே கடனை செலுத்தாதவர் என அறிவித்து, அவரது புகைப்படத்தை வங்கிகள் பிரசுரிக்க வேண்டும் என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது.