முசாஃபர் நகர்
உத்திரப் பிரதேச ரெயில் விபத்து ரெயில் பாதையில் பழுது ஏற்பட்டுள்ளதை ரெயில் ஓட்டுனருக்கு தெரிவிக்காததே காரணம் என தெரிய வந்துள்ளது.
கலிங்கா உத்கல் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு 23 பேரை காவு வாங்கியது தெரிந்ததே. அந்த விபத்துக்கான விசாரணை நடைபெற்று வருகிறது. இதன் முதல் கட்ட விசாரணையில் ரெயில் பாதையில் பழுது ஏற்பட்டதை ரெயில் நிலையத்துக்கோ ரெயில் ஓட்டுனருக்கோ தெரிவிக்காததே காரணம் என தெரிய வந்துள்ளது.
இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் தெரிவிப்பதாவது :
”ரெயில் பாதை பழுது காரணமாக சுமார் 15 மீட்டர் நீளமுள்ள தண்டவாளம் மாற்றப்படுவதற்காக நீக்கப் பட்டுள்ளது. அப்போது வேகமாக வந்த கலிங்கா எக்ஸ்பிரஸ் அதே பாதையில் வந்துள்ளது. புதிய தண்டவாளத்தை பதிக்கும் பணியில் ஈடுப்பட்டிருந்த பணியாளர்கள் உயிரைக் காத்துக் கொள்ள அங்கிருந்து ஓடி உள்ளனர்.
அங்கு தண்டவாளம் சரியாக பொருத்தப்படாததால் ரெயிலின் பெட்டிகள் தடம் புரண்டு இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது. உடைந்த அந்த தண்டவாளம் ரெயிலின் ஏ1 கோச்சின் கீழே கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதை பொருத்தும் லின்க் பெட்டியின் மறுபக்கம் விழுந்து கிடந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விசாரணையில் இந்த தகவல், அருகில் உள்ள கத்தவுலி ரெயில் நிலையத்துக்கும் தெரிவிக்கப்படவில்லை என தெரிய வந்துள்ளது. இந்த தகவல் கத்தவுலி ரெயில் நிலையத்துக்கு தெரிந்திருந்தால் ரெயில் கத்தவுலிக்கே வராமல் வேறு தடத்துக்கு மாற்றப்பட்டிருக்கும். மீரட் முதல் முசாஃபர் நகர் வரை தகவல் ஏன் தெரிவிக்கப் படவில்லை என்னும் கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது.
ரெயில் பாதையில் அபாய எச்சரிக்கை கொடியும் இல்லாததால் ரெயில் ஓட்டுனர் திடீரென பிரேக்கை அழுத்தி நிறுத்தியுள்ளார். அதனால் தான் அவரால் ரெயிலை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. தவிர இதற்கு சதிவேலைகள் காரணமில்லை” என கூறுகிறார்கள்