டில்லி:
சசிகலா உள்ளிட்ட 3 பேர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்டுள்ள தண்டனைக்கு எதிரான சீராய்வு மனு மீதான விசாரணை வரும் 22ம் தேதி நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் மீதான சொத்து குவிப்பு வழக்கில் 4 பேருக்கும் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதமும் விதித்து பெங்களூரு தனி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்றம் 4 பேர் மீதான தண்டனையை ரத்து செய்து அனைவரையும் விடுதலை செய்தது.
இதை எதிர்த்து கர்நாடகா அரசு உச்சநீதிமன்றத்தில மேல் முறையீடு செய்திருந்தது. இதற்கிடையில் ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ம் தேதி இறந்துவிட்டார். இதன் பின்னர் மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் ஜெயலலிதாவை வழக்கில் இருந்து விடுவித்து, மற்ற 3 பேருக்கும் தனி நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உறுதி செய்தது. இதனால் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பண அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் 3 பேர் சார்பில் சீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு வரும் 22ம் தேதி விசாரணைக்கு வருகிறது. இதற்கான பட்டியலை உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ளது. நீதிபதிகள் பாப்தே, அமித்ராய் ஆகியோர் முன்னிலையில் 8ம் நம்பர் கோர்ட்டில் 22ம் மதியம் 1.50 மணிக்கு விசாரணை நடக்கிறது. மனுதார்கள் சார்பில் வக்கீல் கேஷ்வானி ஆஜராகிறார்.