டில்லி
மதுரா – டில்லி ரெயில் பாதைக்காக மரங்களை வெட்டுவதை தடுக்க போடப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம், அரசு தாஜ்மகாலை அழிக்க நினைக்கிறதா என கேள்வி எழுப்பியுள்ளது.
மத்தியில் ஆளும் பா ஜ க அரசு, மதுராவில் இருந்து டில்லி வரை கூடுதல் ரெயில் பாதை அமைக்க சுமார் 400 மரங்களை வெட்ட திட்டமிட்டிருந்தது. அதை எதிர்த்து சுற்றுச்சூழல் ஆர்வலர் மேத்தா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மரங்களை வெட்டுவதன் மூலம் சுற்றுச்சூழல் மாசு அடைந்து தாஜ்மகால் பாழாகும் என தெரிவித்திருந்தார். தனது மனைவியின் நினைவாக முகலாய மன்னன் ஷாஜஹானால் 1631 ஆம் வருடம் கட்டப்பட்ட தாஜ்மகால் உலக அதிசயமாக யுனெஸ்கோவால் போற்றப்பட்டுள்ளதையும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு விசாரணையில் உச்சநீதி மன்றம், “இந்த அரசு உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மகாலை பாழாக்க நினைக்கிறதா? தாஜ்மகாலின் தற்போதைய படங்களை அரசு காணவில்லையா? அப்படி இல்லையெனில் இணையதளத்தில் வெளியாகியுள்ள புகைப்படங்களை போய் அரசு பார்க்கட்டும். இதற்கு மேலும் அரசு விரும்பினால், நேரடியாக இந்த அரசு தாஜ்மகாலை அழிக்க விரும்புகிறது. அதற்கு அனுமதி தேவை எனக்கூறி நீதிமன்றத்தை அணுகவும். இப்படி சுற்றி வளைத்து அந்தக் கட்டிடத்தை அழிப்பதை விட இது எவ்வளவோ மேலான செயல்” எனக் கூறி உள்ளது.
அரசு ரெயில் போக்குவரத்துக்கு இன்னொரு ரெயில் பாதை அவசியம் தேவை என்றும் அதற்காக அந்த மரங்களை வெட்டுவதை தவிர வேறு வழி இல்லை என்றும் வாதாடியது. உச்சநீதிமன்றம் இந்த வழக்கை அடுத்த மாதத்துக்கு ஒத்தி வைத்தது.