இஸ்லாமாபாத்:

காஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச சமுதாயம் தலையிட வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் சாஹித் கான் அப்பாசி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் சுதந்திர தின விழாவை முன்னிட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அவர் பேசுகையில், ‘‘எங்களது நாட்டின் எல்லை பகுதியில் நிலவும் பிரச்னைகளுக்கு, குறிப்பாக காஷ்மீர் விவகாரத்தில் தீர்வு காண ஐ.நா தீர்மானத்தின் அடிப்படையில் சர்வதேச சமூகம் தலையிட வேண்டும். அனைத்து நாடுகளுடனும் சுமூக நட்புறவுடன் இருக்க பாகிஸ்தான் விரும்புகிறது.

அதே சமயம் அண்டை நாடுகளுடன் இறையாண்மை சமத்துவ அடிப்படையில் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கடந்த 50 ஆண்டுகளாக தெற்காசிய மக்கள் புரையோடிப்போன கவலைகளை கொண்டுள்ளனர். இந்த பிரச்னைகளுக்கு இன்னும் இணக்கமான தீர்வு ஏற்படவில்லை. இதனால் இந்த ப குதி மக்கள் செழிப்பும், முன்னேற்றமும் ஏற்படவில்லை’’ என்றார்.

சுதந்திர போராட்ட தியாகிகளை அவர் வாழ்த்தி பேசுகையில், ‘‘ முன்னோர்களின் தியாகங்களுக்கு நாங்கள் கட்டுப்பட்டுள்ளோம். பாகிஸ்தானை முழு சுதந்திர நாடாக ஆக்குவதன் மூலம் அதை நாங்கள் திருப்பி செலுத்துவோம். சமீபத்தில் ஜனநாயகத்தை நிலைநாட்டும், வலுப்படுத்தும் வகையிலான அதிகார மாற்றம் பாகிஸ்தானில் நடந்துள்ளது. ’’ என்றார்