ஐதராபாத்:

ஐதராபாத்தில் நடந்த வெடிகுண்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு கடந்த 12 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த 10 முஸ்லிம்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2005ம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி ஐதராபாத் கிரீன்ஸ் லாண்ட் பகுதியில் உள்ள சிறப்பு இலக்கு படை போலீசார் அலுவலகத்திற்குள் புகுந்த தற்கொலை படை தீவிரவாதி ஒருவன் தாக்குதல் நடத்தினான்.

இதில், ஊர்காவல் படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். இது குறித்து சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாரின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இச்சம்பவத்தில் சர்வதேச தீவிரவாதிக்கு தொடர்பு இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

இது தொடர்பான குற்றப்பத்திரிக்கையில் 20 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதில் 10 பேரை சிறப்பு படை போலீசார் கைது செய்தனர். பல்வேறு காரணங்களால் 3 பேர் இறந்துவிட்டனர். 7 பேர் தலைமறைவாக இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட 10 பேரில் முகமது அப்துல் அஜீம் என்பவர் மட்டும் ஜாமீனில் விடுதலையாகி வெளியே உள்ளார். இந்த வழக்கின் விசாரணை ஐதராபாத் 7வது பெரு நகர அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சீனிவாச ராவ் 10 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரம் நிரூபிக்கப்படவில்லை என நீதிபதி தெரிவித்துள்ளார். விடுதலை செய்யப்பட்ட 10 பேரில் 9 பேர் சிறையில் உள்ளனர்.

இது குறித்து எம்ஐஎம் தலைவர் அசாதுதீன் குவாசி கூறுகையில், ‘‘ இந்த வழக்கை விசாரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?. இதில் சதி இருப்பதை போலீசார் நிரூபிக்கவில்லை. ஆனால் கைது செய்யப்பட்ட 10 பேரும் 12 ஆண்டுகள் சிறையில் வாடியதன் மூலம் தங்களது வாழ்வை இழந்துள்ளனர்’’ என்றார்.