டில்லி,
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், எதிர்க்கட்சிகளுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
இதற்காக காங்கிரஸ் ஆதரவு 18 எதிர்க்கட்சிகளுக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
பல்வேறு இடைஞ்சல்களை கடந்து குஜராத் ராஜ்ய சபா தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ள நிலையில், மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு பாராளுமன்றத்தில் கடும் நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் செயல்படுவது குறித்து ஆலோசிக்க 18 எதிர்க்கட்சியினருடன் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
நாடாளுமன்றத்தின் மழைக் காலக் கூட்டத்தொடர் முடிவடைய இருக்கும் நிலையில், சோனியாகாந்தியின் இந்த அழைப்பு பரபரப்பாக பேசப்படுகிறது.
இதற்கான அழைப்பிதழை மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் அனுப்பியுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ், மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி, திமுக உள்பட பல கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சரத் யாதவ் தற்போது பாட்னாவில் இருப்பதால் அவருக்குப் பதிலாக அலி அன்வர் அன்சாரி இந்தக் கூட்டத்தில் பங்கேற்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கவும், அரசை ஒற்றுமையுடன் எதிர்கொள்ள தங்களுக்குள் நல்ல ஒருங்கிணைப்பைப் பராமரிக்கவும் மாதத்துக்கு ஒரு முறை சந்திப்பது என்று இந்த 18 எதிர்க்கட்சிகளும் ஏற்கனவே நடைபெற்ற கூட்டத்தின்போது முடிவு செய்ததை தொடர்ந்து, இன்று மீண்டும் கூட்டம் நடைபெற இருக்கிறது.