சென்னை
யுனெஸ்கோ நிறுவனம், தமிழ்நாடு அரசு புராதன ஆலயங்களை சரிவர பராமரிக்காததால் சென்னை அருகில் உள்ள இரு புராதனக் கோயில் உட்பட பல கோயில்கள் சிதிலமடைந்துள்ளன என கூறியுள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள கோயில் பாதுகாப்பு திட்டத்தில் அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என ஐ நா சபையின் அங்கமான யுனெஸ்கோவை சென்ற வருடம் சென்னை உயர்நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. அதன் படி யுனெஸ்கோ சென்ற வருடம் கோயில் பாதுகாப்பு எவ்வாறு செய்ய வேண்டும் என வழிமுறைகளை அரசுக்கு வழங்கியது.
இந்த வருடம் மே-ஜுன் மாதங்களில் யுனெஸ்கோ தமிழ்நாட்டின் 10 கோயில்களில் பராமரிப்பு பற்றி சோதனை நடத்தியது. அந்த சோதனை மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர் மற்றும் வானமாமலை பெருமாள் கோயில்கள், நாமக்கல் மருத காளி அம்மன் கோயில், கும்பகோணம் நாகேஸ்வர சாமி கோயில், மானம்பாடி நாகநாத சாமி கோயில், சென்னையை ஒட்டி உள்ள பழவேற்காடு ஆதிநாராயண பெருமாள் கோயில், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில், ஸ்ரீரங்கம் ரங்கனாத சாமி கோயில் போன்ற கோயில்களில் நடைபெற்றது.
இந்த சோதனையின் முடிவு அறிக்கை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது.
”இந்து அறநிலையத் துறையிடம் புராதன கோயில்களை பராமரிக்கவோ அல்லது புனரமைக்கவோ எந்த விதமான திட்டங்களும் இல்லை. தவிர அதற்கான வசதிகளும், வல்லுனர்களும் இல்லை. தவிர இந்த கோயில்களில் வழக்கமான பணிகளையும் முறையுடன் செய்வதில்லை” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக மேலே உள்ள கோயில்களில் ஒரு கோயிலை யுனெஸ்கோ நிறுவனம் பராமரிக்கும் எனவும், அதை வழிகாட்டியாகக் கொண்டு அரசும் செயல்படவேண்டும் என்றும், யுனெஸ்கோவிடம் இருந்து கோயில்களை பராமரிப்பதில் முழு உதவியும் தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத் துறைக்கு வழங்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.