வேலூர்,
காண்டிராக்டரிடம் லஞ்சம் வாங்கியபோது வேலூர் மாநகராட்சி கமிஷனர் கையும் களவுமாக பிடிப்பட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பல்வேறு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டு வந்த நிலையில், மாநகராட்சி பணிகளுக்காக காண்டிராக்டர் ஒருவரிடம் ரூ.20 ஆயிரம் பணம் லஞ்சம் வாங்கியபோது, லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அவரை கையும் களவுமாக பிடித்தனர்.
வேலூர் வேலப்பாடி பகுதியில் டெங்கு கொசு மருந்து அடிக்கும் பணியும், வீடுகளில் உள்ள தொட்டிகளில் மருந்து தெளிக்கும் பணியை காண்டிராக்ட் எடுத்திருந்தார் வேலப்பாடியை சேர்ந்த பாலாஜி (வயது30). இதற்கான டெண்டர் தொகை ரூ.10 லட்சத்து 23 ஆயிரம்.
இந்த பணிகள் அனைத்தும் ஜூன் மாதமே முடித்துவிட்டார். ஆனால், அதற்கான டெண்டர் தொகை அவருக்கு கிடைக்கவில்லை.
வேலை முடித்தற்கான பணம் கேட்டு மாநகராட்சி கமிஷனரை பலமுறை சந்தித்தார். ஆனால், பிடிகொடுக்காத கமிஷனர், இறுதியில், டெண்டர் தொகைக்கான கண்டனத்தில் 2சதவிகிதம் கமிஷன் வேண்டும் என்று அடம் பிடித்தார்.
இதன் காரணமாக கோபமடைந்த காண்டிராக்டர் லஞ்சஒழிப்பில் புகார் கொடுத்தார். அவர்களின் ஆலோசனையின் போரில், இன்று காலை கமிஷனரை சந்தித்து ரசாயண பவுடர் தடவிய பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் மாநகராட்சி கமிஷனர் குமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
அவரிடம் போலீசார் மாநகராட்சி கமிஷனர் அறையில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாநகராட்சி கமிஷனரே லஞ்ச வாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.