கொழும்பு:

கொழும்புவில் நடந்த 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 53 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கொழும்பு எஸ்.எஸ்.சி. ஸ்டேடியத்தில் நடந்தது.

முதலில் பேட் செய்த இந்திய அணியில் புஜாரா, ரஹானே ஆகியோர் செஞ்சுரிகள் அடித்தனர். இறுதியில் 9 விக்கெட் இழப்புக்கு 622 ரன்கள் குவித்து இந்தியா ‘டிக்ளேர்’ செய்தது. அடுத்து விளையாடிய இலங்கை அணி 183 ரன்களில் சுருண்டு ‘பாலோ ஆன்’ ஆனது. 439 ரன்கள் பின் தங்கிய இலங்கை அணிக்கு ‘பாலோஆன்’ கொடுத்து 2வது இன்னிங்சிலும் பேட் செய்ய இந்தியா பணித்தது.

2வது இன்னிங்சில் இலங்கையின் தொடக்க வீரர்களாக கருணாரத்னேவும், தரங்காவும் இறங்கினர். தரங்கா (2 ரன்) வந்த வேகத்தில் வெளியேறினார். இதன் பின்னர் 2வது விக்கெட்டுக்கு கருணாரத்னேவும், குசல் மென்டிசும் கைகோர்த்தனர். மென்டிஸ் ஒரு ரன்னில் இருந்த போது அஸ்வின் பந்து வீச்சில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ‘மிட் ஆன்’ திசையில் தவான் வீணடித்தார். அதன் பிறகு மென்டிஸ்&கருணாரத்னே கூட்டணியை எளிதில் அசைக்க முடியவில்லை.

மென்டிஸ் சதம் (110 ரன், 135 பந்து, 17 பவுண்டரி) அடித்து ஆட்டம் இழந்தார். 3வது நாள் ஆட்ட நேர இறுதியில் இலங்கை அணி 2 விக்கெட்டுக்கு 209 ரன்கள் எடுத்து இருந்தது. கருணாரத்னே 92 ரன்களுடனும், புஷ்பகுமாரா 2 ரன்னுடனும் களத்தில் நின்றனர். இன்றைய 4வது நாள் ஆட்டத்தில் இலங்கை அணிக்கு கருணாரத்னே நம்பிக்கை வீரராக ஆடினார்.

கருணாரத்னே 94.4 வது ஓவரில் இலங்கை 310 ரன்கள் எடுத்து இருந்த போது 141 ரன்களில் 5-வது விக்கெட்டாக வெளியேறினார். ஜடேஜா பந்துவீச்சில் ரெகானேவிடம் கேட்ச் கொடுத்து கருணாரத்னே வெளியேறினார். இதனையடுத்து அடுத்தடுத்த விக்கெட்களை ஜடேஜா வீழ்த்தினார். ஜடேஜா 5 விக்கெட்களை வீழ்த்தியதை தொடர்ந்து இந்தியா இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி நகர்ந்தது.

இலங்கை அணி 112.5 ஓவர்களுக்கு 8 விக்கெட்களை இழந்து 379 ரன்கள் எடுத்து இருந்த போது திக்வாலே 27 ரன்களுடனும் ஹிராத் 16 ரன்களுடனும் விளையாடினர். திக்வாலேவை (31 ரன்கள்) 115.-1 வது ஓவரில் பாண்டியா வெளியேற்றினார். அடுத்து களமிறங்கிய பெர்னாண்டோ அஸ்வின் பந்து வீச்சில் ஒரு ரன்னில் வெளியேறினார். ஜடேஜா, அஸ்வின் அதிரடியால் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

இலங்கை அணி 116.5 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து 386 ரன்கள் எடுத்தது. போட்டியில் இந்தியா 53 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. காலேயில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி 304 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1:0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 2வது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி தற்போது வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது.