திண்டுக்கல்:
இரோம் சர்மிளாவை கொடைக்கானலில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் ராம.ரவிக்குமார் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தில் ஆயுத சட்டத்தை எதிர்த்து பல ஆண்டுகளாக பட்டினி போராட்டம் நடத்தியவர் இரோம் சர்மிளா. “மணிப்பூர் போராளி” என்றும் “இரும்புப் பெண்மணி” என்றும் அம்மாநில மக்களால் அழைக்கப்படுகிறார்
கடந்த முறை நடந்த மணிப்பூர் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு மிக்குறைந்த வாக்குள் பெற்று தோல்வி அடைந்தார்.
இந்த நிலையில் இரு மாதங்களுக்கு முன்பு கொடைக்கானல் வந்த இரோம் சர்மிளா, லண்டனைச் சேர்ந்த தனது காதலர் தேஸ்மன் கொட்டின்கோவை திருமணம் செய்துகொண்டு கொடைக்கானலிலேயே தங்கப்போவதாக அறிவித்தார். மேலும் இங்குள்ள பழங்குடி இன மக்களுக்களின் உரிமைக்காக போராடப்போவதாகவும் அறிவித்தார்.
இதற்கிடையே அவரும் அவரது காதலர் தேஸ்மன் கொட்டின்கோவும் கொடைக்கானல் சார்பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பம் அளித்தனர். சட்டப்படி விண்ணப்பம் அளித்து 30 நாட்களுக்குப் பிறகே திருமணம் செய்துகொள்ள முடியும் என்பதால் அதற்காக காதலர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில், கொடைக்கானல் பேத்துப்பாறையைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் கொடைக்கானல் சார்பதிவாளர் ராஜேசிடம், “இரோம் சர்மிளா திருமணத்தை இங்கே நடத்தக்கூடாது” என்று கோரி மனு அளித்தார். அந்த மனுவில், “மணிப்பூரில் ராணுவத்துக்கு எதிராக நீண்டகாலம் போராட்டம் நடத்தியவர் இரோம் சர்மிளா. இதனால் அம்மாநிலத்தில் பதட்டமான சூழல் நிலவியது. தற்போது அவர் கொடைக்கானலில் தங்கி, இங்குள்ள மக்களுக்காக போராடப்போவதாக அறிவித்திருக்கிறார். இது சுற்றுலா நகரான கொடைக்கானலின் அமைதியை கெடுக்கும் முயற்சி ஆகும். ஆகவே அவர் கொடைக்கானல் சார்பதிவாளர் அலுவலகத்தில் திருணம் செய்துகொள்ள அனுமதிக்கக்கூடாது” என்று குறிப்பிட்டிருந்தார்.
பிறகு சார்பதிவாளரிடம் சில ஆதாரங்களையும் அளித்தார். இது குறித்த விசாரணை முடிவுக்கு வந்த பின் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு இறுதி ஆணை வழங்கப்படும் என்று சார்பதிவாளர் தெரிவித்தார்.
இந்த நிலையில் இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ராம. ரவிக்குமார், கொடைக்கானல் துணை கண்காணிப்பு அலுவலகத்தில் இதே கோரிக்கையை வலியுறுத்தி புகார் அளித்துள்ளார்.
பிறகு இது குறித்து பேசிய ராம.ரவிக்குமார், “இரோம் சர்மிளா மட்டுமல்ல.. வெளிநாட்டைச் சேர்ந்த அவரது காதலர் தேஷ்மந்த் கொட்டின் கோவும் பல இயக்கங்களுடன் தொடர்பில் உள்ளவர் என்று கூறப்படுகிறது. அவர்களை கொடைக்கானலில் தங்க அனுமதித்தால் இங்கும் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். ஆகவே அவர்களுக்கு கொடைக்கானலில் திருமணம் செய்துவைக்கக்கூடாது. இங்கு தங்கவும் அனுமதிக்கக்கூடாது. ஆகவேதான் அவர்களது ஊருக்குச் சென்று திருமணம் செய்துகொள்ள அறிவுறுத்தி திருப்பி அனுப்ப வேண்டும்” என்று தெரிவித்தார்.