டில்லி :
காதுகேளாதோருக்கான டெஃப்லிம்பிக் போட்டியில் 5 பதக்கங்களை குவித்த வீரர்களை வரவேற்க ஆளில்லாமல் போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காது கேளாதோருக்கான டெஃப்லிம்பிக் போட்டி துருக்கியில் கடந்த ஜூலை மாதம் 18ஆம் தேதி தொடங்கியது.
இந்தப் போட்டிகள் கடந்த 30ஆம் தேதி நிறைவடைந்தது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் 46 வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர்
5 பதக்கங்களை குவித்த இந்தியா இதில் பளுத்தூக்குதல் உட்பட தங்கம் உள்ளிட்ட 5 பதக்கங்களை இந்திய வீரர்கள் குவித்தனர். இந்நிலையில் வீரர்கள் இன்று நாடு திரும்பினர். டில்லி விமான நிலையத்துக்கு வந்த வீரர்களைவரவேற்க அரசு சார்பில் யாரும் விமான நிலையத்துக்கு வரவில்லை.
இதனால் வீரர்கள் பெரும் அதிருப்தியடைந்தனர். இதனை கண்டிக்கும் விதமாக விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்லப் போவதில்லை என்றும் வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து டெஃப்லிம்பிக் அசோஸியேஷன் நிர்வாகி ஷா கூறுகையில், ‘‘டெஃப்லிம்பிக் போட்டியில் இந்தியா அதிக பதக்கங்களை குவித்திருப்பது இதுவே முதல் முறை. மேலும் ஒலிம்பிக் மற்றும் பாராஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று நாடு திரும்பும் வீரர்களுக்கு மட்டும் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
ஆனால் 5 பதக்கங்ளை வென்று நாடு திரும்பியுள்ள காதுகேளாத வீரர்களுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் வாழ்த்து கூட தெரிவிக்காமல் இருப்பது வீரர்களுக்கு மிகுந்த மன உளைச்சளை ஏற்படுத்தியுள்ளது’’ என்றார்.