டில்லி
ராஜ்யசபை எம்பிக்கள் 30 பேர் வராததால், பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசியல் அந்தஸ்து அளிக்கும் மசோதாவை தாக்கல் செய்ய முடியாமல் மத்திய அரசு தவிப்பில் உள்ளது.
பிரதமர் மோடி பலமுறை ராஜ்யசபை எம்பிக்கள் தவறாமல் கூட்டத்துக்கு வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இருந்தும் பாஜக மற்றும் அதன் கூட்டணிக்கட்சி எம்பிக்கள் பலரும் சரியாக வருவதில்லை. இன்று முக்கியமான மசோதாக்களில் ஒன்றான பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசியல் அந்தஸ்து அளிக்கும் மசோதாவை தாக்கல் செய்ய எண்ணி இருந்த மத்திய அரசுக்கு தனது ஆதரவு எம்பிக்கள் 30 பேர் வராதது பெரும் சங்கடத்தை உண்டாக்கியது
வராதவர்களில் பல அமைச்சர்களும் உள்ளனர். நிர்மலா சீதாராமன், ஸ்மிரிதி இரானி, ரவிசங்கர் பிரசாத், தர்மேந்திரா பிரதான், பியூஷ் கோயல், எம் ஜே அக்பர் மற்றும் ராம்தாஸ் அதாவாலே ஆகியோரும் வராதவர்களில் உள்ளனர். அஇஅதிமுக, மற்றும் அகாலி தள் ஆகிய கட்சிகளின் எம்பிக்களிலும் பலர் வரவில்லை.
பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தில் பெண்கள் மற்றும் இஸ்லாமியர்களின் எண்னிக்கையை அதிகப் படுத்துதல், மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் உரிமைகள் போன்ற பல சரத்துக்கள் கொண்ட இந்த மசோதா வந்திருந்த 124 பேரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. எதிர்கட்சியின் கொண்டு வந்த திருத்தங்களை ஏற்று 74 பேர் வாக்களித்தனர். எதிர்த்து 52 வாக்குகள் பதிவாயின.
இவ்வாறு ஒரு முக்கியமான மசோதா தாக்கல் செய்ய முடியாமல் போனதால் மத்திய அரசு மிகவும் சங்கடத்தில் ஆழ்ந்துள்ளது.
முன்னதாக நடந்த விவாதத்தில் பங்கு கொள்ள எதிர்க்கட்சியினரே அதிகம் பேர் இருந்தனர். மத்திய அரசு எதிர்க்கட்சிகளை பிரித்தாளுவதை விட முதலில் தங்கள் கட்சி எம்பிக்கள் ஒழுங்காக கூட்டங்களுக்கு வருகின்றார்களா என்பதை கவனிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் அரசுக்கு தங்களின் கண்டனத்தை தெரிவித்தன.