டில்லி
இலவசமாக கொடுக்கும் பொருட்களுக்கான ஜிஎஸ்டி கிரெடிட் திரும்பக் கிடைக்காது என்னும் சட்டத்தினால் இனி இலவசப் பொருட்கள் வழங்கப்பட மாட்டாது என தெரிய வருகிறது.
பீட்சாவில் தொடங்கி பேஸ்ட் வரை ஒன்று வாங்கினால் இன்னொன்று இலவசம் என விற்கப்பட்டு வந்தது தெரிந்ததே. தற்போது ஜிஎஸ்டி விதிகளின்படி இலவசமாக தரப்படும் பொருட்களுக்கு வரி விதிப்பு கிடையாது. எனவே விற்பனையாளர் செலுத்திய வரியையும் திரும்பப் பெற முடியாது. எனவே இனி இலவசங்கள் வழங்கப்பட மாட்டாது என தெரிய வருகிறது.
இது பற்றி பார்லே பிஸ்கட் நிறுவனத்தின் மயன்க் ஷா, “இதுவரை நாங்கள் ஒன்று வாங்கினால் இன்னொன்று இலவசம் என பலவகை பிஸ்கட்டுகளை விற்று வந்தோம். ஆனால் ஜிஎஸ்டி விதிமுறைகள் காரணமாக டிஸ்கவுண்ட் விலையில் பிஸ்கட்டுகளை விற்பனை செய்ய உத்தேசித்துள்ளோம். இது சற்று கடினமானது தான். ஆனால் வேறு வழியில்லை” எனக் கூறுகிறார். அதே போல் கோத்ரெஜ் நுகர்வோர் பொருட்கள் நிறுவனமும் தற்போது விற்பனை ஊக்கம் என்னும் பெயரில் எந்தப் பொருளையும் இலவசமாக தர முடிவதில்லை எனத் தெரிவித்துள்ளது. பிட்சா ஹட், டோமினோஸ் போன்ற பிட்சா தயாரிப்போரும் தற்போது இரண்டு பிட்சாக்கள் வாங்கினால் மூன்றாவது பிட்சாவுக்கு டிஸ்கவுண்ட் தருவதாக விளம்பரம் செய்கின்றனர்.
மருத்துவர்களுக்கு அனைத்து மருந்து உற்பத்தியாளர்களும் ஃப்ரீ சாம்பிள் என்னும் பெயரில் இலவசமாக மருந்துகளை தருகிறார்கள். தற்போதைய ஜி எஸ் டி விதிமுறையின்படி அதற்கான மதிப்பை கணக்கிட்டு அதற்கான வரியை மருந்து உற்பத்தியாளர்கள் செலுத்த வேண்டும். அந்த ஜி எஸ் டி கிரெடிட் திரும்ப பெற முடியுமா என்பதும் சரியாக சொல்லப்படவில்லை.
இது பற்றி பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கையில், “வியாபாரத்தை மேம்படுத்த ஒன்று வாங்கினால் இன்னொன்று இலவசம் என்னும் திட்டம் அவசியமாகும். அதை பரிசு எனக் கொள்ளக் கூடாது. அதை வியாபார மேம்பாட்டு செலவு என கணக்கிட்டு அதற்கான ஜிஎஸ்டி கிரெடிட் உற்பத்தியாளருக்கு கிடைக்கும்படி விதிகளை மாற்ற வேண்டும். அல்லது தற்போதுள்ள விதிகளின்படி அதை எவ்வாறு பெறவேண்டும் என்பதை தெளிவாக்க வேண்டும்” என கூறுகின்றனர்.
ஜி எஸ் டி அமுலாக்கப்பட்டதில் இருந்து பல குழப்பங்கள். இப்போது இதுவும் சேர்ந்துக் கொண்டுள்ளது.