இராமேஸ்வரம்:

மணிமண்டபத்தில் அப்துல் கலாம் சிலை அருகே வைக்கப்பட்டிருந்த குரான், பைபிள் ஆகியவை இன்று அகற்றப்பட்டன.

இராமநாதபுரம் மாவட்டம் இராமேசுவரத்தை அடுத்த தங்கச்சிமடத்தில் பேய்க்கரும்பு பகுதியில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவிடத்தில் மத்திய அரசின் பாதுகாப்பு துறை சார்பில் ரூ.15 கோடி செலவில் மணிமண்டபம் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது.

3.5 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ள இந்த மணிமண்டபத்திற்கு ‘அப்துல்கலாம் தேசிய நினைவகம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த மணிமண்டபத்தை பிரதமர் நரேந்திரமோடி கடந்த 27ம் தேதி திறந்து வைத்தார். மணிமண்டபத்தில் அப்துல்கலாம் வீணை வாசிப்பது போன்ற சிலை வைக்கப்பட்டுள்ளது.

இந்த மணிமண்டபத்தை ஏராளமானோர் பார்வையிட்டு வருகின்றனர். இந்த நிலையில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ நிருபர்களிடம் பேசுகையில், ‘‘அப்துல்கலாம் மணிமண்டபத்தில் வீணை வாசிப்பது போல் அவரது சிலை வைக்கப்பட்டு உள்ளதற்கும், அங்கு பகவத்கீதை வைக்கப்பட்டுள்ளதற்கும் கண்டனம் தெரிவித்தார். திருக்குறளில் இல்லாத கருத்துகள், உபதேசங்கள் வேறு எந்த நூலில் உள்ளன? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இதனை தொடர்ந்து பல அரசியல் தலைவர்கள் பகவத்கீதை வைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தனர். அப்துல் கலாம் சாதி, மத, இன, மொழிகளுக்கு அப்பாற்பட்டவர். பகவத்கீதை வைக்கப்பட்டது தவறு என கூறப்பட்டது. இந்நிலையில், அப்துல்கலாம் வீணை வாசிப்பது போன்ற சிலையில் இடம்பெற்றுள்ள பகவத் கீதை அருகில் இஸ்லாமின் புனித நூலான குரான் மற்றும் கிறிஸ்துவ புனித நூலான பைபிள் ஆகியவற்றை கலாம் அண்ணன் பேரன் சலீம் வைத்தார்.

இது குறித்து அப்துல்கலாமின் அண்ணன் பேரன் ஷேக் சலீம் ராமேசுவரத்தில் இன்று நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ கலாம் மணிமண்டபத்தில் பகவத் கீதை மட்டும் வைக்கப்பட்டுள்ளது போன்று ஒரு தவறான தகவல் பரப்பப்பட்டுள்ளது. அவர் அனைத்து புத்தகங்களையும் படித்தவர். அவர் வாசித்த, ரசித்த புத்தகங்கள் அனைத்தும் மணிமண்டபத்தில் உள்ளன.

திருக்குறள், பகவத் கீதை, திருக்குரான், பைபிள் என பல்வேறு புத்தகங்கள் இங்கு உள்ளன. அவை அனைத்தும் கண்ணாடி பேழையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. திறப்பு விழாவின் போது அவை முறைப்படுத்தப்படாமல் வைக்கப்பட்டிருந்தன.

இதனை சிலர் சரியாக கவனிக்காமல் பகவத் கீதையை வைத்து தவறான தகவல் பரப்பியுள்ளனர். விரைவில் அனைத்து புத்தகங்களும் அங்கு முறைப்படுத்தி வைக்கப்படும்’’ என்றார். இதையடுத்து அப்துல் கலாம் சிலை அருகே மணிமண்டபத்தில் வைக்கப்பட்ட குரான், பைபிள் இன்று அகற்றப்பட்டுள்ளன.