மல் அரசியலுக்கு வரப்போவதாக அவருடைய பாணியில் வழக்கம்போல் கவிதை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.  கமல்ஹாசனுடைய அரசியல் கவிதையை ஆளும் அரசிற்கு எதிரான போர்பரணியாக பலர் பார்க்கின்றனர்.  அரசியல் களத்திற்குள் நுழைவதற்கு அந்த நபர் என்னவாக அடையாளப்படுத்திக் கொள்கிறார் என்பது மிக முக்கியம்.  தேசிய ,திராவிட ,இந்துத்துவ ,இடதுசாரி என பல்வேறு அடையாளங்கள் இருக்கின்றன. இதில் எந்த முகத்துடன் அரசியலுக்குள் நுழைய பார்க்கிறார் என்பது குறித்து திறனாய்வு தேவைப்படுகிறது.

யார் இந்த கமல்ஹாசன்

80 களுக்கு முந்தைய திரைப்படங்களில் பெரும்பாலும் பிளேபாய் கதாபாத்திரங்கள்.  அந்த சமயத்தில் ரஜினியின் திரைப்படங்கள் மிகச்சிறந்த குணச்சித்திர திரைப்படங்களாக இருக்கும் (ஆறிலிருந்து அறுபது வரை,புவனா ஒரு கேள்விக்குறி,ஜானி.)

கமலகாசனின்  வளர்ச்சியை 87 க்குப் பிறகு என்று எடுத்துக் கொள்வது  போதுமானது. 87 க்குப் பிறகான கமல்ஹாசனின் திரைப்படங்களில்தான் கமலின் தனித்துவம் தெரிந்தது.  நாயகன் படத்திற்கு முந்தைய திரைப்படங்கள் எல்லாம் மசாலா ரகத் திரைப்படங்கள்( மூன்றாம் பிறை போன்ற சில திரைப்படங்களைத் தவிர.)

87 லிருந்து 2017 வரை வந்த எந்த படங்களிலும் எந்த அரசியல் கட்சியை யையும் எதிர்த்து வசனம் பேசியதில்லை. சினிமாவிற்கு அப்பாற்பட்டு, நடந்த அரசு விழாக்களிலும் அரசை விமர்சித்து கமல் பேசியதில்லை. கலைஞர் முதலமைச்சராக இருந்த போது நடந்த ஒரு விழாவில் , “ஆண்டவனின் புண்ணியத்தில் இந்த விழா நடப்பதாக கூறினார்கள். ஆனால் எனக்கென்னவோ இங்கு ஆள்பவர்களின் புண்ணியத்தால்தான் இந்த விழா நடைபெறுகிறது” என்றார். கருணாநிதியை மேடையில் வைத்துக் கொண்டு அவரையும் புகழ்ந்து,  தன்னுடைய நாத்திக அறிவையும் வெளிப்படுத்திக் கொண்டார்.

“தசாவதாரம்” விழா

கமல்ஹாசனின் ஆளும்கட்சி சார்பிற்கு பல உதாரணங்களை சொல்லலாம். தசாவதாரம் திரைப்படத்தில் சுனாமி காட்சிகள் வரும். சுனாமி வந்தது ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில், ஆனால் தசாவதாரம் திரைப்படம் வெளிவந்தது கலைஞர் ஆட்சிக் காலத்தில்.  ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட சுனாமியில் வீரசாகசம் புரிந்த கதாநாயகனு்ககு, கலைஞர் ஆட்சிக் காலத்தில் பாராட்டு விழா நடப்பது போல் காட்சி இருக்கும்.

ஜெயலலிதா ஆட்சி காலத்தில்,சண்டியர் படத்தின் பெயர் பிரச்சனையான போது,ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க,விருமாண்டி என பெயர் மாற்றம் செய்தார். அதை அந்த படத்திலும் ஒரு காட்சியில் ,” என்னை சண்டியர்னு கூப்பிடாதீங்க, அதான், “ஆத்தா விருமாண்டின்னு  வைச்சிருச்சுல்ல” என்று சொல்வார். தன்னை ஆதரிக்கும்பொழுதும், தன்னை எதிர்க்கும்பொழுது, ஆட்சியாளர்களை பகைத்துக் கொள்ளாமல் பக்குவமாக நடந்துகொள்வதில் கமலுக்கு நிகர் கமல்.

விசுவரூபம் திரைப்பட பிரச்சனையில் சிறுபான்மை அமைப்புகளின் பக்கமே ஜெயலலிதா நின்றார். அப்போது, அந்த பிரச்சனையில் மீண்டும் மீண்டும் இசுலாமிய அமைப்புகளிடம் வாதம் செய்வதில்தான் தனது சூரத்தனத்தை காண்பித்தார் கமல். அரசை எதிர்த்து ஒரு வார்த்தை பேசவில்லை.  நான் இந்த நாட்டை விட்டே போகிறேன் என்று பண்ககார வீட்டு குழந்தை போல் சண்டித்தனம் செய்தார்.  அப்போது கூட ,” என் கருத்துரிமைக்கு எதிராக இந்த அரசு செயல்படுகிறது” என்று ஒரு வார்த்தை பேசவில்லையே நம்மவர்.

எந்திரன் திரைப்படத்திற்குப் பிறகு, சிறிய பட்ஜெட் திரைப்படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்ததது. எல்லா திரையரங்குகளையும், குறிப்பிட்ட தயாரிப்பு நிறுவனங்களே வாங்கி விடுகிறது என்று திரைத்துறை கதறியது. அப்போது.  அரசிற்கு எதிராக போர்க்குரல் எழுப்பவே  இல்லையே!

தற்போது திரையரங்கிற்கு மாநில அரசு கேளிக்கை வரியை ரத்து செய்யவேண்டும் என்று சொல்லும் கமல், திரைப்படத்தின் தன்மைக்கேற்ப திரையரங்குகளில் கட்டணம் நிர்ணயம் செய்யவேண்டும் அதாவது 500 ரூபாய்க்கு குறையாமல் கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று பத்து வருடங்களுக்கு முன்னால் கருத்து கூறியவர்தான்.

ஊழலுக்கு எதிரான இவருடைய கோபம் இவ்வளவு தாமதமாக வெளிப்படுவதுதான் நம்மை சந்தேகிக்க வைக்கிறது.

குருதிப்புனல் படத்தில் கமல்

கமலும் கம்யுனிசமும்

கமலை இடதுசாரி சிந்தனையாளர் என்று பலர் சிலாகிப்பதுண்டு.  என்னை கம்யுனிஸ்ட் என்று தவறுதலாக நினைக்கின்றனர் என்று கமலே கூறினாலும் பலர் கமலை கம்யுனிஸ்ட் என்று தவறுதலாகவே நினைக்கின்றனர். கம்யுனிச தத்துவம் குறி்த்து கமலின் பார்வையை குருதிப்புனல் படத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம்

குருதிப்புனல் திரைப்படத்தில் 13 வயது சிறுமியை காமப்பசிக்கு இரையாக்க முயற்சி செய்கிறான் நக்சல் அமைப்பைச் சேர்ந்தவன்.  அந்த குழந்தையை காப்பாற்ற, கமலின் மனைவி தன்னை எடுத்துக் கொள் என்கிறாள்.  உடனே,அந்த நக்சல் குழுவைச் சேர்ந்தவன்,கவுதமியிடம் சல்லாபம் கொள்வான்.

கமல்ஹாசனுக்கு  நக்சல் அமைப்பின் மீது மாற்று கருத்து இருக்கலாம்.  அவர்கள் சித்தாந்தை கடுமையாக விமர்சித்து படம் எடுக்கலாம்.அதற்கான எல்லா உரிமையும் கமலுக்கு உண்டு.ஆனால்,புரட்சிகர அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் எல்லாம் காமப்பசிக்காக எதையும் செய்யக்கூடியவர்கள் என்று சித்தரிப்பது எந்த வகையில் அறம்.?  தனது வணிக நலனிற்காக,  புரட்சிகர அமைப்புகளை இழிவுபடுத்தியது எந்த வகையில் நியாயம்.?

ரஜினிகாந்த் நடித்து ராணுவ வீரன் என்கிற திரைப்படம் வந்தது.  அதிலும் தலைமறைவு குழுக்களை மய்யப்படுத்திய திரைப்படம்தான். அந்த படத்தில் நக்சல் அமைப்பச் சேர்ந்த சீரஞ்சீவி வில்லன். அவன் ஊர் பண்ணையார்களை அழிப்பார். ஊர் சொத்துக்களை கொள்ளையடிப்பார்.  ரஜினிகாந்த் அவருடன் சண்டையிட்டு ஊர் மக்களை காப்பாற்றுவார்.  இந்த படமும் நக்சல் அமைப்பினரை விமர்சித்து வந்த படம்தான்.  ஆனால்,இழிவுபடுத்தி வந்தபடமல்ல. இடதுசாரி கருத்தியல் மீது தீரா பகை கொண்டவர்கள் கூட குருதிப்புனல் மாதிரியான படத்தை எடுக்கமாட்டார்கள்.அதனால்,கமலுக்கு இடதுசாரி முகம் பொருந்ததாது.

அன்பே சிவம்” படத்தில்..

அன்பே சிவம் திரைப்படம் நடித்ததால் கம்யுனிஸ்ட்கள் பலருக்கு கமலை பிடிக்கும்.  ஆனால் அந்த படத்தில் எங்கும் கம்யுனிச சிந்தனை போதிக்கப்படவில்லை.  நீயும் கடவுள் நானும் கடவுள் என்று படம் முழுவதும் மாதவனிடம் ஆன்மீக பிரச்சாரம் செய்கிறார்.  இதுதான் கம்யுனிச சிந்தாதந்தமா? படத்தில் கம்யுனிசமும் இல்லை நாத்திகமும் இல்லை.  ஒவ்வொருத்தருக்குள்ளும் கடவுள் இருக்கிறார்.  ஜீவாத்மா வேறு பராமாத்மா வேறு அல்ல என்பது அத்வைத தத்துவம்தானே.  இந்த தத்துவத்தை கி.பி 8 ம் நூற்றாண்டில்,  ஆதிசங்கரர் சொல்லிவிட்டாரே.  அந்த ஆதிசங்கரர் தத்துவத்தைதான் கமல் 2001ல் சொல்லியிருக்கிறார்.  இது எப்படி கம்யுனிச பிரச்சார திரைப்படமாகும்.

அப்படியே அரைகுறையாகவாவது கம்யுனிசம் பேசினாரே கமல்ஹாசன் என்று எடு்ததுக் கொண்டாலும் விசுவரூபம் படத்தில் தன்னுடைய ்அமெரிக்க சார்பை காட்டியவர்தான். தசாவதாரம் திரைப்படத்திலும் உலகை காப்பாற்ற அமெரிக்க விஞ்ஞானி என்கிற பெயரில்தான் வருவார்.  கடைசி காட்சியில் ஜார்ஜ் புஷ் கமலை பாராட்டுவார்.  மூன்றாம் உலகநாடுகளின் மீதும் அரேபியநாடுகளின் மீதும் போர்தொடுக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை தனது வணிக நலனிற்காக பெருமைபடுத்தி காட்டும் கமலை கம்யுனிஸ்ட்டாக எப்படி ஏற்கமுடியும்.?

கமலின் நாத்திகமும்,  கருப்புச் சட்டை பாசமும்

கமல் எப்போதும் தன்னை நாத்திகராக காட்டி கொள்பவர். இந்து மக்கள் கட்சி தன் மீது வழக்கு போட்டபோது கூட, தான் ஒரு கருப்புச்சட்டைக்காரன் என்று கூறிக் கொண்டார்.  .  இவர் உண்மையில் கருப்புச் சட்டை கோட்பாடு உடையவராக இருந்தால் நீட் தேர்வில் சமூக நீதியும்,மாநில உணர்வும் பறிபோகிறது என்று  உரிமைக்குரல் எழுப்பியிருக்க வேண்டும் அல்லவா.?  ஏன் எழுப்பவில்லை.  எடப்பாடியிடம் பொங்கி எழும் கருப்புச் சட்டைக்காரர் நடுவண் அரசிடம் ஏன் மௌனம் காக்கிறார்.?

தன்னுடைய படங்களில் நாத்திகம் பேசும் கமல்ஹாசன், சமூகநீதி ஏன் பேச மறுக்கிறார்.? உன்னால் முடியும் தம்பி படத்தில் இடஒதுக்கீட்டிற்கு எதிரான வசனம் வரும்.  அது பாலச்சந்தர் படம் ,  கமல் படமல்ல என்று யாராவது விளக்கம் தரலாம். விருமாண்டி பட சர்ச்சையின் போது, கமல் ஒரு கேள்வி கேட்டார், “சாதி கூடாதுன்னு  சொல்றீங்க ஆனால்,மக்கள் தொகை கண்க்கெடுப்புல சாதி கேட்குறீங்க” . இதுதான் கமல் கேட்ட கேள்வி.

விருமாண்டி” கமல்

பெரியாரின் அடிப்படைக் கொள்கை வகுப்புவாரி பிரதிநிதித்துவம். மக்கள் தொகை அடிப்படையில் சமூக பிரதிநிதித்துவம் வேண்டும் என்பதுதான் கருப்புச் சட்டையின் அடிப்படை கோட்பாடே.  ஆனால்,இந்த கருப்புச் சட்டை கமலோ,சாதி வாரி இடஒதுக்கீட்டிற்கு எதிராக குரல்எழுப்புகிறார்.

20 வருடங்களுக்கு முன்னால்,சாதி வெறிபிடித்த ஆசிரியரின் பிரம்படியால் ஒருதலித் சிறுமியின் கண் பறிபோனது.  அப்போது கமல் எழுதிய கவிதை மிக பிரபலம்.  அப்போது முற்போக்காளர்கள் மத்தியில் பாராட்டைப்பெற்ற கமல்தான், தற்போது சேரி பிகேவியர் என்பது சமூகத்தில் இருக்கிற சொல்தான்.  அதை விட மோசமாக வார்த்தை சமூகத்தில் இருக்கிறது என்று மழுப்புகிறார்.  சேரி பிகேவியர் என்கிற வார்த்தையை சொன்ன காய்த்ரியை ஒப்புக்காக கூட அவர் கண்டிக்கவில்லை.

தனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்று கதாநாயகன் பேசிய எத்தனையோ படங்கள் வெளிவந்திருக்கின்றன.  விஜயகாந்தின் சிவப்பு மல்லி,  சத்யராஜ் நடித்த பல படங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம். கமலகாசன் நாத்திகனாக நடித்த ஒரு படத்தையாவது கூறமுடியுமா?.

கடவுள் இல்லை என்று சொல்லவில்லை, இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்கிறேன் இதுதான் கமலின் நாத்திக த்த்துவம்.  இதை நாத்திகம் என்று ஆத்திகவாதிகளே ஏற்கமாட்டார்களே!  அப்புறம் எப்படி பெரியாரியர்கள் ஏற்பார்கள்.? நாத்திகர் என்கிற போர்வையில் அழுத்தமான ஆத்திகப்பிரச்சாரத்தைதான் கமல் தொடர்ந்து செய்துவருகிறார். கருப்புச் சட்டை கொள்கைக்கும் கமலுக்கும் துளியும் தொடர்பில்லை என்பது உறுதியாகிறது.  ஆக, கமல் கண்டிப்பாக திராவிட முகமல்ல என்பது உறுதி.

தமிழ்தேசிய பார்வையில் கமல்ஹாசன்

அழுத்தமாக தமிழில் பேசக்கூடியவர்.  அவ்வப்போது தமிழில் கவிதையும் படைக்ககூடியவர். கமலுக்கு தமிழ்தேசிய முகம் பொருத்தமாக இருக்குமா ?  என்பதை பார்ப்போம். இவர் நடத்தும் பிரபலநிகழ்ச்சியில், தமிழ் தாய் வாழ்த்து அவமானப்படுத்தப்பட்டது. தமிழ்தாய் வாழ்த்தை கொட்டாவியுடன் பாடினர். ஏன் அவ்வாறு நிகழ்ந்தது? என்கிற கேள்விக்கு தமிழ்தாய் வாழ்த்தை சொல்லிக் கொடுத்தோம் என்கிறார் கமல். இந்திய தேசிய கீதத்தை அவமானபடுத்தி கமல் இப்படி செய்வாரா. ஒரு படத்தில் தேசிய கீதத்தை அவமதிப்பவனை அடித்து துவம்சம் செய்கிறார்.ஆனால்,தமிழ்தாய் வாழ்த்தை அவமதித்தால்,ஆதரவு தருகிறார்.

இதுமட்டுமல்ல, எப்போதெல்லாம் காவிரி பிரச்சனை வருகிறதோ அப்போதெல்லாம்,கமலகாசனுக்கு இந்தியன் என்கிற உணர்வு மேலிடும். அந்த சமயத்தில் தமிழன் என்று ஒருபோதும் வாய் திறந்து சொல்லமாட்டார். தென்னிந்திய திரைப்பட சங்கத்திற்கு தமிழ்நாடு திரைப்பட சங்கம் என்று பெயர் மாற்றம் செய்யவேண்டும் என்கிற கோரிக்கை வந்தபோது,இந்திய திரைப்பட சங்கம் என்கிற பெயர் பொருத்தமாக இருக்கும் என்று முன்மொழிந்தவர் கமலகாசன். அப்போது,ரஜினிகாந்த் தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று பெயர் வைக்கவேண்டும் என்கிற கோரிக்கையை ஆமோதித்தார்.ஆனால் பரமக்குடி பச்சைத்தமிழரோ இந்தியர் என்று மார்தட்டினார்.

விஜயகாந்த்

நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோது விஜயகாந்த் காவிரி நதிநீருக்காக திரையுலகையே ஒருங்கிணைத்து நெய்வேலியில் ஆர்ப்பாட்டம் நடத்தினார். கமல் ஈழப்பிரச்சனைக்காக, தமிழர்களின் வாழ்வாதாரத்திற்காக ,,திரையுலகினரையோ, தனது நற்பணி மன்றத்தினரையோ ,பயன்படுத்தியிருக்கிறாரா? என்கிற கேள்வி எழுகிறது..

தற்போது நடக்கும் ஹைட்ரோகார்பன் எதிர்ப்பு,  கதிராமங்கலம் குறித்து அவரது கருத்து என்ன என்று வெளியிட்டிருக்கிறாரா.? செய்தி ஊடகங்களில் அமைச்சர்களின் ஊழல் குறித்து மட்டுமா செய்திகள் வெளிவருகிறது?. மக்கள் போராட்டங்கள் குறித்த செய்திகள் கமல் கண்ணிற்கு படவில்லையா? என்கிற அய்யம் நமக்கு எழுகிறது.

ரஜினிகாந்த் விஜயகாந்த் கமல் ஒப்பீடு

ரஜினி அரசியலுக்கு வரப்போகிறார் என்று 20 வருடங்களுக்கும் மேலாக பேசப்படுகிறது. ஜெயலலிதா கருணாநிதி ஆளுமையாக இருந்த தருணத்தில் வருவதற்கான துணிச்சல் அவருக்கு இல்லை. அதனால் தற்போது வருவதற்கான முயற்சியில் இருக்கிறார் அல்லது வரலாமா என்கிற தியானத்தில் இருக்கிறார் என்று கொள்ளலாம். ரஜினிகாந்திற்கு A , B, C மூன்று சென்டர்களிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். 234 தொகுதியிலும் பிரபலமான முகம். இதுவே அவரது மூலதனம்.

விஜயகாந்தைப் பொறுத்தவரை கருணாநிதி, ஜெயலலிதா என்கிற இரண்டு ஆளுமைகள் இருக்கும்பொழுதே துணிச்சலாக அரசியலுக்கு வந்தவர். எதிர்கட்சித் தலைவராகவும் வளர்ச்சி பெற்றார். ஆனால்,தற்போது செயல்படமுடியாத தலைவராகத்தான் மக்களால் பார்க்கப்படுகிறார். பி அண்ட் சி சென்டர்களில் வலிமை பெற்ற விஜயகாந்தின் நிலையே தள்ளாட்டமாகத்தான் இருக்கிறது.

கமலைப் பொறுத்தவரை 234 தொகுதியிலும் பிரபல முகம்தான். ஆனால்,ரஜினியை பார்ப்பது போன்ற ஒரு நெருக்கம் கமலிடம் கிடையாது. கமலை ஒரு அந்நியத்தன்மையுடன்தான் தமிழ் நாட்டுமக்கள் பார்த்தார்கள். அவருடயை பல படங்கள் பி அண்ட் சி சென்டர்களில் வெற்றிப் பெற்றது கிடையாது..  ஆளவந்தான், ஹேராம், உன்னைப் போல் ஒருவன்  போன்ற பல படங்களை உதாரணமாக சொல்லலாம். ஜனரஞ்சகம் என்று நம்பி அவர் எடுத்த விருமாண்டி திரைப்படம் கூட உசிலம்பட்டி மலையாண்டி திரையரங்கில் நான்கு நாட்கள் கூட ஓடவில்லை.

ரஜினிகாந்த்

ஆகவே கமல் ஒருவேளை அரசியலுக்கு வந்தால், இந்த காரணிகள்தான் அவர் வெற்றியை தீர்மானிக்க வேண்டும். இந்த அடித்தட்டு மக்களின் நம்பிக்கையை, அமைச்சர்களின் ஊழல் என்கிற ஒற்றைக்குற்றச்சாட்டின் மூலம்  வென்று விடலாம் என்று நினைக்கிறாரோ என்னவோ.?

.எம்ஜிஆர் இறந்தபோது சிவாஜி, பாக்யராஜ் போன்றோர்களுக்கு தனிக்கட்சி ஆரம்பிக்கும் எண்ணம் வந்தது. 89ம் ஆண்டு தேர்தலில் நின்றார்கள் . படு தோல்வி அடைந்தார்கள். அதே போல் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ரஜினிகாந்த், கமலகாசன் போன்றோர்களுக்கு ஆசை எட்டிபார்க்கிறது.  ரஜினி தனது ரசிகர் பலத்தை நம்புகிறார்.  கமலோ ரஜினி போல் தனக்கு ரசிகர் படை இல்லாததால்,அரசை விமர்சித்து, அறிவு ஜீவி அடையாளத்தை வெளிப்படுத்தி, தனது அரசியல்  ஆசையை வெளிப்படுத்துகிறார்.   கமலகாசனை இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்து விட்ட காரணத்தினால்,முற்போக்குவாதிகள் ஆதரிப்பது நகைச்சுவை.

கட்டுரையாளர்

அரசை விமர்சிக்க வேண்டுமென்றால், நீட் தேர்வுக்கு ஆதரவான போராட்ட களத்தில் நின்று விமர்சனம் செய்யுங்கள். கதிராமங்கலத்தில் நிற்கிறார்களே அந்த விவசாயிகளுடன் நின்று எதிர்த்து பேசுங்கள். அதை விடுத்து, கமலுடன் நின்று அரசை விமர்சிப்பது சரியான அரசியல் நகர்வாக இருக்காது. கமலுக்கு இருக்கும் முற்போக்கு, பிற்போக்கு அடையாளங்கள் அனைத்தையும் திரைப்படம் முடிந்ததும் அவரே அழித்துவிடுவார். இதை உணராமல் அவருக்கு அரசியல் முகம் கொடுக்கவேண்டாம். ஒவ்வொரு படத்திற்கும் அவருக்கு தேவைப்படுவது நல்ல வணிக முகம். அந்த முகத்திற்காக எல்லா அவதாரங்களையும் எடுப்பார். ஏனென்றால் அடிப்படையில் அவர் நல்ல கலைஞன்.

தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த நடிகர் கமல்ஹாசனுக்கு,

கமல்ஹாசன் என்னும் ஆளுமை அரசியலுக்கானதாமூன்றாம் பிறையில் அழ வைத்து, நம்மவர்  போன்ற திரைப்படங்களின் மூலம் நெகிழ வைத்தவர் நீங்கள். இன்னும் முதிர்ச்சியான படைப்புகளை தமிழ் சூழலுக்கு தரலாமே.