மும்பை:

பீகாரில் நிதிஷ்குமாருடன் ஏற்பட்டுள்ள கூட்டணியால் பாகிஸ்தான் மகிழ்ச்சி அடைந்துள்ளதா? என்று பாஜவுக்கு சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது.

பீகாரில் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளோடு கூட்டணியை முறித்துக் கொண்ட நிதிஷ்குமார், தற்போது பாஜ ஆதரவுடன் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார்.

இது தொடர்பாக சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாமா தலையங்கத்தில், ‘‘தற்போதை அரசியலில் அறநெறியும், லட்சியங்களும் நீண்ட நாட்கள் இருப்பதில். நரேந்திரமோடியும், அமித்ஷாவும் சேர்ந்து எதிர்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் பறித்துக் கொண்டுள்ளனர்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதில் ‘‘முன்னதாக பீகார் சட்டமன்ற தேர்தலின் போது நிதிஷ்குமார் வெற்றி பெற்றால் பாகிஸ்தான் அதை கொண்டாடும். அதனால் பாகிஸ்தான் தற்போதைய நிதிஷ்குமாரின் வெற்றியை கொண்டாடுகிறதா?’’ என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

மேலும், ‘‘நிதிஷூடன் கூட்டணி அமைத்துக் கொண்டதன் மூலம் பாகிஸ்தானை பாஜக மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. தேசிய ஜனநயாக கூட்டணி தனது பழைய நண்பரை திரும்ப பெற்றுள்ளது. ஆனால், இக்கூட்டணியில் இருந்து விலகிய போது மோடியை நிதிஷ்குமார் கடுமையாக விமர்சனம் செய்தார்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘‘தேசிய ஜனநாயக கூட்டணியில் நிதிஷ்குமாரை மீண்டும் இணைத்ததன் மூலம மோடி வெற்றி பெற்றுள்ளார். ஆனால் அரசியலில் அறநெறி, லட்சியங்கள் எதுவும் இல்லை. மணிப்பூர், கோவா போன்ற மாநிலங்களில் பெரும்பான்மை இல்லாமலேயே பாஜ ஆட்சி அமைத்துள்ளது.

மத்தியில் ஆட்சியில் இல்லாமல் இருந்தால் இது சாத்தியமாகியிருக்குமா என்பதை பாஜ எண்ணிப் பார்க்க வேண்டும். மேலும், பசு பாதுகாவலர்கள் நடத்தும் வன்முறை சம்பவங்கள் குறித்து நிதிஷ்குமாரின் நிலைபாட்டை தெளிவுபடுத்த பாஜ கேட்டுக் கொள்ள வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளது.