ரவுண்ட்ஸ்பாய் அனுப்பிய செய்திக் கட்டுரை:
நேற்று கமல் வெளியிட்ட அறிக்கையில், “இந்தியை எதிர்த்து குரல் கொடுத்தபோதே அரசியலுக்கு வந்துவிட்டேன்” என்று தெரிவித்தது சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.
தமிழகத்தில் ( அப்போது மதராஸ் மாகாணம்) இந்தி எதிர்ப்பு போராட்டம் முதலில் நடந்தது 1937ம் ஆண்டு.
அப்போது சென்னை மாகாணத்தில் முதல்முறையாக வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சியின் ராஜாஜி தலைமையில் அமைந்த அரசு, பள்ளிகளில் இந்தி படிப்பதைக் கட்டாயமாக்கியது. இதை எதிர்த்து, எதிர்கட்சியாக விளங்கிய நீதிக்கட்சியும் பெரியார் ஈ. வெ. இராமசாமியும் மூன்று ஆண்டுகள் போராட்டம் நடத்தினர். மாநாடுகள், பேரணிகள் மற்றும் மறியல் போராட்டங்கள் நடந்தன. அரசின் காவல் நடவடிக்கைகளில் இரண்டு போராட்டக்காரர்கள் இறந்தனர்; பெண்கள், சிறுவர்கள் உட்பட 1198 பேர் கைது செய்யப்பட்டனர். காங்கிரசு அரசு 1939ஆம் ஆண்டு பதவி விலகியது. இதையடுத்து சென்னை மாகாண பிரித்தானிய ஆளுநர் ‘எர்ஸ்கின் பிரபு’ நேரடி பொறுப்புக்கு வந்தார். அவர், பிப்ரவரி 1940ஆம் ஆண்டில் இந்தக் கட்டாய இந்திக் கல்வியை விலக்கினார்.
கமல், 1954ம் ஆண்டு பிறந்தார். ஆகவே இந்த போராட்டத்தில் அவர் கலந்துகொண்டிருக்க வாய்ப்பு இல்லை.
பிரிட்டனிடம் இருந்து இந்தியா விடுதலை பெற்ற பிறகு புதிய இந்தியக் குடியரசில் நிலவ வேண்டிய அலுவல்மொழி குறித்து விவாதம் நடந்தது. முடிவில், அரசுப்பணி மொழியாக இந்தி தேர்ந்தெடுக்கப்பட்டது. மேலும் அடுத்த 15 ஆண்டுகளுக்கு ஆங்கிலம் இணை அலுவல்மொழியாக விளங்கும் என்றும் அதன் பின்னர் இந்தி மொழி மட்டுமே அரசுப்பணிகளில் பயன்படுத்தப்படும் என்றும் ஏற்றுக்கொள்ளபட்டது. புதிய இந்திய அரசியலமைப்பு சனவரி 26, 1950 அன்று நடப்பிற்கு வந்தது.
ஆகவே ஏற்கெனவே அரசியலமைப்பில் ஏற்றுக்கொண்டபடி 1965 ஆண்டிலிருந்து இந்தி மட்டுமே அரசுப்பணிமொழியாக விளங்க மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டது. இது இந்தி பேசாத மாநிலங்களில் எதிர்ப்பலைகளை உண்டாக்கின.
தமிழகத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக மாணவர்கள் கிளர்ந்தெழுந்தனர். 1965ம் ஆண்டு குடியரசு நாளை ( ஜனவரி 26) கருப்புதினமாகக் கொண்டாட தி. மு. க அழைப்பு விடுத்தது.
மதுரையில் 25 ஜனவரியன்று போராட்டக்காரர்களுக்கும் காங்கிரஸ் கட்சியினர் சிலருக்கும் இடையே எழுந்த கைகலப்பு பெரும் கலவரமாக வெடித்தது. மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் பரவியது. கலவரம் காவலர்களால் அடக்க முடியாத அளவில் அடுத்த இரண்டு மாதங்கள் தொடர்ந்து நடந்தது.
பெரும் அளவில் வன்முறை, தீவைப்பு , தடியடி, துப்பாக்கிச்சூடு என தமிழகமே கவலரக்காடாக மாறயது. கலவரத்தில் இரு காவல்துறையினர் உட்பட 70 பேர்கள் இறந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர அப்போதைய இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும் வரை ஆங்கிலமும் அரசுப்பணிகளில் இணைமொழியாக இருக்கும் என்ற உறுதிமொழி அளித்தார். இந்த உறுதிமொழியை அடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.
இந்த 1965ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றபோது கமல்ஹாசனுக்கு 11 வயது.
இப்போராட்டத்தில் கலந்துகொண்டு அவர் இந்தி எதிர்ப்பு முழக்கமிட்டாரா என்பது குறித்து தகவல் ஏதும் இல்லை.
ஆகவே எந்த அர்த்தத்தில், இந்தித் திணிப்பை எதிர்த்து குரல் கொடுத்தபோதே அரசியலுக்கு வந்ததாக கமல் சொல்கிறார் என்பது தெரியவில்லை.
தவிர, இந்தித் திரைப்படங்கள் சிலவற்றில் கமல் நடித்தார். அதில் ஏக்துஜே கேலியே என்ற திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருவேளை புரியாத கவிதைகள் எழுதுவது போல கமல் ஏதோ சொல்லவந்து பிறர்தான் தவறாக புரிந்துகொண்டார்களா என்பதும் மிகக் குறிப்பிடத்தக்கது.