அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆர். நாளிதழில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் குறித்த செய்திகள் புறக்கணிக்கப்படுவதாக விமர்சனம் எழுந்துள்ள நிலையில், “இது தவறான கருத்து. முதல்வர் மற்றும் அமைச்சர்கள் குறித்த செய்திகள் தொடர்ந்து வெளியாகின்றன” என்று அந்நாளேட்டின் ஆசிரியர் மருது. அழகுராஜ் நமது பத்திரிகை டாட் காம் இதழிடம் தெரிவித்துள்ளார்.

சிலமாதங்களுக்கு முன் அ.தி. மு.க அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தைகாக சசிகலாவையும், தினகரனையும் கட்சியில் இருந்து ஒதுக்கி வைப்பதாக அமைச்சர்கள் அறிவித்தனர்.  இதை ஓ.பி.எஸ் அணி வரவேற்றது. அதே நேரம் இதனால் சசிகலா அணி இரண்டாக உடைந்தது. தினகரன் ஆதரவாளர்கள் தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர்.

இதனால் அ.தி.மு.கவில் ஓ.பி.எஸ்.அணி, எடப்பாடி அணி, தினகரன் அணி என மூன்று  அணிகள் செயல்படுகின்றன.

இந்த நிலையில் கடந்த மாதம் மூன்றாம் தேதி திகார் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த தினகரன், என்னை யாரும் ஒதுக்கி வைக்க முடியாது என்றும்  மீண்டும் கட்சி பணிகளில் ஈடுபட உள்ளேன் என்றும் தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார் தினகரனை ஒதுக்கி வைத்தது ஒதுக்கி வைத்ததுதான் என்று உறுதிபட தெரிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தினகரன் ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர்களும் ஆட்சியை பார்த்துக்கொள்ளட்டும், தினகரன் கட்சியை பார்த்துக் கொள்வார் என்றனர்.

எடப்பாடி பழனிசாமியோ இதுகுறித்து எந்த கருத்தும் கூறாமல்,  ஆட்சியையும், கட்சியையும் வழி நடத்துவதில் முனைப்பாக இருக்கிறார்.   தினகரனை அழைக்காமலேயே அ.தி.மு.க தலைமைகழகத்தில் கூட்டம் நடத்தினார். இப்தார்விருந்து நிகழ்ச்சிக்கும் தினகரனை அழைக்க வில்லை. அதே போல மதுரையில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நிகழ்ச்சிக்கும் தினகரன் அழைக்கப்படவில்லை.

அதே நேரம்  அ.தி.மு.க. வின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆர் நாளிதழில் சசிகலா,  எடப்பாடி பழனிசாமி, தினகரன் ஆகியோர் குறித்த  செய்திகள் தொடர்ந்து வெளியாகின.  எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் படங்களுடன் இடம் பெற்றன.

1988-ம் ஆண்டு நமது எம்.ஜி. ஆர். நாளிதழை மறைந்த ஜெயலலிதா ஆரம்பித்தது முதல், அ.தி. மு.க ஆளும் கட்சியாக இருந்த போதெல்லாம் அரசு சார்பில் முதல்வர் வழங்கும் நலத்திட்ட உதவிகள் குறித்த செய்திகள்  தவறாமல் இடம் பெற்று வந்துன.

ஆனால் கொடுங்கையூர் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஆறுதல் கூறிய செய்திகள் நமது எம்.ஜி.ஆர் நாளிதழில் இடம் பெறவில்லை

அதேபோல் அமைச்சர்களின் செய்திகளும், படங்களும்  இடம் பெறவில்லை.

அதே போல, ஜனாதிபதி தேர்தலுக்கான  வாக்குப்பதிவு  குறித்த செய்திகள் நமது எம்.ஜி.ஆர்   இதழில் தலைப்புச் செய்தியாக வெளியானது. அதில், பொதுச் செயலாளர் சின்னம்மா அறிவுறுத்தலின்படி கழக நாடாளுமன்ற சட்ட மன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர் என்று  முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப்பட்டது.

மருது. அழகுராஜ்

இந்த செய்தியில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதல் வாக்கை செலுத்தினார் என்று ஒரு இடத்தில் மட்டும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.  எடப்பாடி அல்லது  அமைச்சர்கள் வாக்களிக்கும் படங்கள் இடம்பெறவில்லை.

இதற்கிடையே,   டி.டி.வி. தினகரன் தனது வீட்டில் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்திய செய்தி முதல் பக்கத்திலேயே இடம் பெற்றது. . தினகரனை நிர்வாகிகள் சந்தித்து பேசியது தொடர்பாக 6 படங்கள் கடைசி பக்கத்தில் பிரசுரமாகி உள்ளன. .

“சிறையில் சசிகலா விதிகளை மீறவில்லை” என்கிற செய்திகளும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப்பட்டுள்ளன.

இதனால், “நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் சசிகலா குடும்பத்தினரால் நடத்தப்படுகிறது.  அவர்களது  ஆலோசனைப்ட எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் குறித்த செய்திகள் புறக்கணிக்கப்பட்டிருக்கலாம்” என்ற விமர்சனம் எழுந்துள்ளது. .

அமைச்சர் ஜெயக்குமாரும், இது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் நமது எம்.ஜி.ஆர். நாளேட்டின் ஆசிரியர் மருது. அழகுராஜிடம், பேசினோம்.

அவர், “22 நாட்களாக முதல்வர் மற்றும் அமைச்சர்களின் குறித்த செய்திகள்தான் நமது எம்.ஜி.ஆர். இதழின் முதல் பக்கத்தில் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப்பட்டன.

இடையில் பெங்களூரு சிறையில் இருக்கும் கழக பொதுச்செயலாளர் சசிகலா, சீராய்வு மனு அளிக்கும் நேரத்தில் அவர் மீது உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுக்களை சிலர் உள் நோக்கத்துடன் பரப்பினர். இதற்கு தகுந்த பதில் தரவேண்டும் அது குறித்த செய்திகளில் கவனம் செலுத்துங்கள் என்று கழக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார். கட்சி நாளேட்டின் கடமையும் அதுதான்.

ஆகவே அந்த இரு நாட்கள், சசிகலா குறித்த தவறான செய்திகள் பரவுவதை விமர்சித்து எழுதினோம்.

அந்த விவகாரம் முடிந்து, தற்போது மீண்டும் சட்டமன்றக்கூட்டத்தொடர் துவங்கிவிட்டது.

கழக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும், “இனி முதல்வர் மற்றும் அமைச்சர்கள் குறித்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்” என்றர்.

இதோ… மறுபடியும் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் குறித்த செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம்.

இன்றுகூட முதல்வர் குறித்த செய்திதான் வந்திருக்கிறது. இதில், “முதல்வர் படத்தை சிறிதாக போட்டிருக்கிறீர்களே” என்று சிலர் கேட்கிறார்கள்.

சட்டமன்றத்தில் முதல்வர் பேசுகிற படத்தை வெளியிட்டிருக்கிறோம். அதில் மற்ற அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் என ஒட்டுமொத்த அவையும் கவர் ஆகியிருக்கிறது. அதனால் முதல்வர் படம் சிறிதாகத்தானே வரும்?

ஆனாலும் ஆத்திரப்படாமல், “முதல்வர் படத்தை நாளை பெரிதாக வெளியிடுகிறோம்” என்று பதில் சொல்கிறோம்.

ஆக, வேண்டுமென்றே சிலர் இது போன்ற புரளிகளை கிளப்பி விடுகிறார்கள்.

முன்பு 22 நாட்கள்,  கழக பொதுச்செயலாளர்  சசிகலா படமோ செய்தியோ இல்லையே. அதனால் அ இல்லை.. அதனால அவரை ஒதுக்கினோம்  என்று அர்த்தமா?

இதெல்லாம் சாதாரண விசயம். வேண்டுமென்றே சிலர் இதுபோன்ற புரளிகளை கிளப்பி விடுகிறார்கள்.  வேறு சிலர், அறியாமல் இதை ஊக்கப்படுத்துகிறார்கள்.

தி.மு.க. அதிகாரபூர்வ நாளேடான முரசொலியில சில நாட்களில் கருணாநிதி படம் வரும்…  சில நாட்களில் ஸ்டாலின படம் வரும். கனிமொழி படம் வரவே வராது. ஆக,  அங்கேதான் பிரச்சினை இருக்கிறது. ஆனால் அதை யாரும் கண்டுகொள்வதில்லை” என்ற மருது. அழகுராஜ், “வகுப்பறையில் ஒரு வாத்தியார் வந்து அமரும் வரை.. மாணவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டும், விளையாடிக்கொண்டும் இருப்பார்கள். வாத்தியார் வந்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும்.

அதுதான் தற்போதைய நிலை. ஆனால் சிலர்,  வாத்தியார் வந்துவிடக்கூடாது என நினைக்கிறார்கள். அது நடக்காது. நிச்சயம் வாத்தியார் வந்துவிடுவார். ஏனென்றால் இது வாத்தியார் கட்சி” என்று முடித்தார் அழகு. மருதுராஜ்.