சென்னை:
நடிகர் கமல்ஹாசன் கட்சி துவங்கினால் வரவேற்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசை விமர்சித்த நடிகர் கமல்ஹாசனை தமிழக அமைச்சர்கள் தரக்குறைவாக விமர்சித்து வருகின்றனர். கமல் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் மு.க.ஸ்டாலின், வைகோ, ஓ.பி.எஸ். உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலர், கமலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசரும் நடிகர் கமலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அரசை விமர்சித்ததற்காக அமைச்சரே கமல் மீது வழக்குப் போடுவோம் என மிரட்டல் விடுத்திருப்பது ஜனநாயக விரோதம்” என்று தெரிவித்த அவர், “எல்லோருக்கும் உள்ள உரிமை நடிகர் கமல்ஹாசனுக்கு இல்லையா?” என்றும் கேள்வி எழுப்பினார்.
“கமல் கட்சி துவங்கினால் ஆதரிப்பீர்களா” என்று கேட்கப்பட்டதற்கு, “அரசியலுக்கு வரவும், கட்சி துவங்கவும் அனைவருக்கும் உரிமை உண்டு. ஆகவே கமல் கட்சி துவங்கினால் வரவேற்போம்” என்று பதில் அளித்தார்.