விஜயகாந்துடன் பார்த்தசாரதி
விஜயகாந்துடன் பார்த்தசாரதி

சென்னை:

விஜயகாந்த் வீட்டை முற்றுகையிட வந்த செய்தியாளர்கள் மீது எம்.எல்.ஏ. பார்த்தசாரதி தலைமையிலான தே.மு.தி.கவினர் கல்வீசித் தாக்கினர். இதையடுத்து அவர் உட்பட 18 பேர் கைது செய்யப்பட்டனர்.

சில நாட்களுக்கு முன்பு சென்னையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தை செய்தியாளர்கள் சந்தித்தபோது, ஆத்திரமடைந்த அவர், செய்தியாளர்களைப் பார்த்து தூ என்று துப்பினார். இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

சம்பவ இடத்தில்...
சம்பவ இடத்தில்…

விஜயகாந்த்தின் செயலுக்கு பல்வேறு பத்திரிகையாளர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்தன. மறநாள் தஞ்சையில் தே.மு.தி.க நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட விஜயகாந்த், “பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன். நான் செய்தது சரிதான்” என்று பேசினார். அதே கூட்டத்தில், பேசிய தே.மு.தி.க. சார்பில் விருகம்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவாக இருக்கும் பார்த்தசாரதி, “பத்திரிகையாளர்களை வீடு புகுந்து தாக்குவேன்” என்று ஆவேசமாக பேசினார்.

இந்த நிலையில், விஜயகாந்துக்கு கண்டனம் தெரிவித்து, அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக பத்திரிகை சங்கங்கள் அறிவித்திருந்தன. அதன்படி இன்று  சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டை முற்றுகையிட சென்றனர்.

அப்போது விஜயகாந்த் வீட்டுக்கு அருகில் எம்எல்ஏ பார்த்தசாரதி தலைமையிலான தேமுதிகவினர் குழுமி இருந்தனர். அவர்கள், பத்திரிகையாளர்கள் மீது சரமாரியாக கற்களை வீசித் தாக்கினர். இதில் பத்திரிகையாளர்கள் பலருக்கு காயம் ஏற்பட்டது. தே.மு.தி.கவினர்,செய்தியாளர் ஒருவரை கழுத்தில் ஓங்கி அடித்ததில் அவர் தடுமாறி நிலை குலைந்து கீழே விழுந்து காயமடைந்தார்.

சம்பவம் நடந்த இடத்தில்தான் விருகம்பாக்கம் காவல் நிலையம் இருக்கிறது.  காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக தேமுதிக எம்.எல்.ஏ. பார்த்தசாரதி உள்ளிட்ட இருபதுக்கும்  மேற்பட்ட தேமுதிகவினர் கைது செய்யப்பட்டனர்.

இந்தத் தாக்குதல் குறித்து பத்திரிகையாளர்கள் தரப்பில் கூறப்படுவதாவது:

“தேமுதிக தலைவர் விஜயகாந்த் தூண்டுதலின்பேரில்தான் இந்த தாக்குதல் நடந்துள்ளது. அவர் உள்பட நூறு  தேமுதிகவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் கொடுத்துள்ளோம். இப்போது பார்த்தசாரதி உள்பட 18 பேரைத்தான் போலீஸார் கைது செய்துள்ளனர். விஜயகாந்த் மீது உடனடியாக முதல் தகவல் அறிக்கையை காவல்துறையினர் பதிவு செய்ய வேண்டும்.  பத்திரிகையாளர்களைத் தாக்குமாறு அவர்தான் உத்தரவிட்டுள்ளார்.

-இவ்வாறு பத்திரிகையாளர்கள் சார்பில் கூறப்பட்டது.