சென்னை:
தங்களது கோரிக்கையை ஏற்று, தனது தோட்டத்தில் உள்ள கிணறை மக்களுக்கு இலவசமாக அளிக்க முன்வந்த முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்ஸுக்கு நன்றி தெரிவிப்பதாக தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்க தலைவர் செல்லபாண்டியன் தெரிவித்துள்ளார்.
தேனி பகுதியில் ஓபிஎஸ்-சுக்கு சொந்தமான இடத்தில் கிணறுகள் ஆழமாக தூர் வாரப்பட்டதால், அந்த பகுதியில் உள்ள மற்ற கிணறுகளின் நீர்மட்டம் வற்றி, குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அந்த பகுதி மக்கள் ஓபிஎஸ்-க்கு சொந்தமான கிணற்றை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இத்த நிலையில் ஒபிஎஸ் தரப்பினருக்கும், பொதுமக்களுக்கும் இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தையின்போது, கிணறை ஓபிஎஸ் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.
இதற்கிடையில், சில நாட்களுக்கு முன், “ஓ.பி.எஸ். தனது தோட்டத்தை மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும்” என்று தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்க தலைவர் செல்லபாண்டியன் கோரிக்கை விடுத்திருந்தார்.
தற்போது ஓபிஎஸ் தனது கிணற்றை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்குவதாக அறிவித்த தற்கு மதுகுடிப்போர் சங்கம் நன்றியை தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து மதுகுடிப்போர் சங்க தலைவர் செல்லபாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது,
“முன்னாள் முதல்வர் ஓபிஎஸ். அவர்களுக்கு. நன்றி! நன்றி!! தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் சார்பாக 12.7.17 அன்று ஓபிஎஸ் அவர்களுக்கு வாட்ஸ்ஸப்”” மூலம் ஒரு அறிக்கையை அனுப்பியிருந்தோம். அதில், தேனிமாவட்டம். பெரியகுளம். தாலுகா லட்சுமி புரத்தில் உள்ள ஓபிஎஸ் அவர்களுக்கு சொந்தமான கிணறை, பொது மக்களின் குடிநீர் தேவைக்காக இலவசமாக வழங்கிட வேண்டினோம்.
அதனை மனபூர்வமாக ஏற்றுகொண்டு கிணறை பொது மக்களுக்காக தானம் வழங்கியிருக்கிறார் ஓ.பி.எஸ். இதன் மூலம் தென்பாண்டி முதல்வர் காமராசர் வழியில் எளிமையான அரசியல் தலைவர் என நிரூபித்துகாட்டியுள்ளார்.
ஓபிஎஸ் அவர்களை தமிழக டாஸ்மாக் மது பிரியர்களான தமிழகத்தில் உள்ள 61.4% (நான்கு கோடி பேர்) சார்பாக தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் நன்றியுடன் வாழ்த்துகிறது.
இவ்வாறு செல்லபாண்டியன் தெரிவித்துள்ளார்.