சென்னை,
கடற்கரை சாலையில் உள்ள நடிகர் சிவாஜி கணேசனின் சிலை அகற்றினால், அதை அதே பகுதியில் சாலையோரம் வைக்க வேண்டும் என்ற சிவாஜி சமூக நலப்பேரவை தொடர்ந்துள்ள ரிட் வழக்கில் அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் 4 வார கால அவகாசம் விதித்துள்ளது.
மறைந்த நடிகர் சிவாஜிகணேசனை கவுரவிக்கும் வகையில் அப்போதைய கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு அவருக்கு, சிவாஜியின் 8அடி முழுஉருவ வெண்கலை சிலையை கடற்கரை சாலையான காமராஜர் சாலை – ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில், காந்தி சிலைக்கு எதிரே நிறுவியது.
ஆனால், இந்த சிலை திறப்பு விழா ஏற்பாடுகள் நடந்தபோது, ‘மாபெரும் தலைவர் மகாத்மா காந்தியின் சிலை அருகில் சிவாஜி சிலை இருக்கிறது. அது காந்தியின் முக்கியத்துவத்தைக் குறைத்து, சிவாஜிக்கு சிலை அமைக்கப்பட்டிருக்கிறது’ என்று சர்ச்சை கிளம்பியது.
அதைத்தொடர்ந்து, சிவாஜிசிலையை அங்கிருந்து அகற்றக்கோரி, காந்தியவாதி சீனிவாசன் என்பவர் 200ஆம் ஆண்டு சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். சீனிவாசனின் மறைவுக்குப் பிறகு அவரது மகன் நாகராஜன் இந்த வழக்கை நடத்தி வருகிறார்.
அதை எதிர்த்து சிவாஜி சிலையை அகற்றக் கூடாது எனக் கோரி சிவாஜி சமூக நலப் பேரவைத் தலைவர் கே.சந்திரசேகரன் உள்ளிட்டோர் எதிர்மனுதாரதாக ஆஜராகினர்.
அதைத்தொடர்ந்து 2011ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வரானதும், இதுகுறித்த வழக்கில், சிவாஜி சிலை காரணமாக போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதுகுறித்த விசாரணையை தொடர்ந்து உயர்நீதி மன்ற நீதிபதிகள், 2014ம் ஆண்டு ஜனவரி 23ந்தேதி, தமிழக அரசு கடற்கரை சாலையில் உள்ள சிவாஜி சிலையை அகற்றுவது பற்றி முடிவெடுக்குமாறு உத்தரவிட்டனர்.
ஆனால், இந்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி, சிவாஜி சமூகநல பேரவை தலைவர் சந்திரசேகரன், மனுத் தாக்கல் செய்தார்
அந்த மனு நிலுவையில் இருக்கும்போது, ‘நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை’ என, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து ஜெயலலிதா தலைமையிலான அரசு, நடிகர் திலகத்திற்கு அமைக்கப்படும் மணி மண்டபத்தில், கடற்கலையில் உள்ள சிவாஜி சிலையை அகற்றி, மணி மண்டபத்தினுள் நிறுவப்படும் என அறிவித்தார்.
இந்நிலையில் தற்போது சிவாஜி மணிமண்டபம் கட்டிமுடிக்கப்பட்டு எந்நேரமும் திறக்கப்படலாம் என்று இருக்கும் வேளையில், நடிகர்திலகம் சிவாஜி கணேசன் சிலையை அகற்றி, நடிகர் திலகத்திற்காகக் கட்டப்படும் மணிமண்டபத்தில் வைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதனை எதிர்த்தும், அகற்றப்படும் நடிகர்திலகத்தின் சிலையை, அதே மெரீனா கடற்கரையில், தற்போது சிலை இருக்கும் பகுதிக்கு கிழக்கு பகுதியில் காமராஜர் சாலையின் ஓரத்தில் மாற்றி அமைக்கவேண்டும் என்று கோரியும், சென்னை உயர்நீதிமன்றத்தில், நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப் பேரவை தலைவர் சந்திரசேகரன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு விரைவில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிவாஜி நலப்பேரவையில் இதுகுறித்து, கடந்த ஒரு வருடமாக அரசுக்கு மனு கொடுத்துள்ளதாக விரிவாக வாதாடப்பட்டது.
அதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர், இதுகுறித்து முடிவெடுக்க மேலும் 4 வார கால அவகாசம் கோரினார்.
இதையடுத்து நீதிபதிகள், அரசுக்கு 4 வாரம் கெடு விதித்தும், அதுவரை சிவாஜி சிலை விவகாரத்தில் தற்போதையே நிலையே தொடரவேண்டும் என்றும் கூறி வழக்கை ஒத்தி வைத்தனர்.
இதன் காரணமாக வரும் 21ந்தேதி சிவாஜி கணேசனின் நினைவுநாள் அன்று சிவாஜிகணேசனுக்கு கட்டப்பட்டுள்ள மணி மண்டபமும் திறக்கப்படாது என்று தெரிகிறிது.