டில்லி:
முதன்முறையாக சூரிய ஒளி மூலம் இயங்கும் ரெயில் பெட்டிகள் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நாட்டிலேயே முதல் முறையாக டீசல் எலக்டிரிக் மல்டிபிள் யூனிட் ரெயிலில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரெயில் பெட்டிகளின் மேல் சூரிய ஆற்றல் தகடுகள் பொருத்தப்பட்டு அதன் மூலம் பெறப்படும் சூரிய ஒளி ஆற்றல் ரெயில் பெட்டியின் மின்சார சாதனங்களான விளக்கு, மின்விசிறி போன்றவற்றின் தேவைக்கு பயன்படுத்தப்படும். ஒவ்வொரு பெட்டியிலும் 16 சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 10 கி.வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும்.
இதை டில்லியில் தொடங்கிவைத்த ரெயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, “இந்திய ரெயில்வே தனது வண்டிகளை பசுமைமயமாகவும், சூழலுக்கு உகந்த வகையிலும் மாற்றியமைக்கும் செயல்களை எடுத்து வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் பலவிதமான சூழலுக்கு ஏற்ற தொழில் நுட்பங்களின் பயன்பாட்டை அதிகரிக்கவுள்ளது.
5 ஆண்டுகளில் ஆயிரம் மெகாவாட் சூரிய ஒளி திட்டங்களை அமைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள சூரிய ஒளி அமைப்பு மூலம் வருடத்திற்கு 21 ஆயிரம் லிட்டர் டீசல் சேமிக்கப்படுகிறது. அதன் மூலம் ரூ. 12 லட்சம் மிச்சமாகும். இந்த அனுகூலம் அடுத்த 25 வருடங்களுக்கு கிடைக்கும். அடுத்த ஆறு மாதங்களில் மேலும் 24 பெட்டிகளில் இந்த அமைப்பு பொருத்தப்படும்’’ என்றார்.