சென்னை:

ந்தேமாதரம் பாடல் எந்த மொழியில் எழுதப்பட்டது என ஆசிரியர் தகுதித்தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி தொடர்பான வழக்கில் தமிழக அரசு சார்பாக பதில் அளிக்கப்பட்டது.

அதில், வந்தே மாதரம், சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டு, வங்கமொழியில் எழுதப்பட்டதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஆசிரியர் காலி பணியிடங்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த ஏப்ரல் 29 மற்றும் ஏப்ரல் 30ம் தேதிகளில் நடந்தது. சுமார் 7 லட்சம் பேர் எழுதிய இந்த தேர்வின் முடிவுகள்  ஜூலை 1ம் தேதி வெளியானது.

இதில் சுமார் 4.93 லட்சம் பட்டதாரிகள் 150க்கு 90 என்ற தேர்ச்சி மதிப்பெண்ணை எடுக்க முடியாமல் தோல்வி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் இத்தேர்வில் வந்தே மாதரம் பாடல் எந்த மொழியில் எழுதப்பட்டது என்ற கேள்வி இடம்பெற்றிருந்தது. அதற்கு சமஸ்கிருதம் மற்றும் வங்க மொழி இரண்டிலும் குழப்பம் இருந்ததால் தேர்வு எழுதிய ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு 7ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது உயர்நீதி மன்றம், வந்தே மாதரம் பாடல் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டதா? அல்லது வங்க மொழியில் எழுதப்பட்டதா ? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

அதற்கு இரண்டு மொழிகளிலும் எழுதப்பட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், முதலில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டு பின்னர் வங்க மொழியில் மாற்றம் செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

இதையடுத்து வந்தே மாதரம் எந்த மொழியில் எழுதப்பட்டது என ஜூலை 11ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது தமிழக அரசு சார்பாக தாக்கல் செய்த பதில் மனுவில், வந்தே மாதரம் சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டு, வங்கமொழியில் எழுதப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.