மும்பை.
மகாராஷ்டிரா மாநில மூத்த அரசு அதிகாரி ஒருவரின் மேல் வருமானவரித்துறை நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இவரே பினாமி சட்டத்தின் கீழ் தண்டனை பெறப்போகும் முதல் அதிகாரி ஆவார்.
மகாராஷ்டிரா மாநில மூத்த அரசு அதிகாரி விகாஸ் ரசல். இவர் மும்பை மெட்ரோபாலிடன் ரீஜன் அயர்ன் அண்ட் ஸ்டீல் மார்கெட்டிங்க் கமிட்டி என்னும் அரசு நிறுவனத்தில் தலைமை அதிகாரியாக பொறுப்பு வகிப்பவர்.
ஜூலை மாதம் ஏழாம் தேதியன்று மும்பை விமான நிலையத்தில், டில்லியில் இருந்து வரும்போது ரூ. 50 லட்சம் கணக்கில் வராத பணம் வைத்திருந்தது சோதனையில் தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து அவர் வீடு மற்றும் அலுவலகத்தை வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். சோதனையில் 65 லட்சம் ரூபாய் ரொக்கப்பணமும், ரூ 50 லட்சம் மதிப்புள்ள நகைகளும் வீட்டில் பிடிபட்டன. அத்துடன் அவர் பினாமி பெயரில் வாங்கிய சொத்துக்களில் ஆவணங்களும் கிடைத்தன. அந்த ஆவணங்களை ஆராய்ந்ததில் இவர் பினாமி பெயரில் குடிசை மாற்று வாரியத்தின் இரு வீடுகள் உட்பட பல சொத்துக்களை வாங்கிக் குவித்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
அந்த குடிசை மாற்று வாரிய வீடுகள் 2013ல் வாங்கப்பட்டுள்ளது. ஒதுக்கீட்டாளர்களிடம் இருந்து தனது நெருங்கிய உறவினர் பெயரில் வாங்கியுள்ளார். இது தவிர இரும்பு மற்றும் ஸ்டீல் வியாபாரிகள் மூலமாக கோடிக்கணக்கில் நகைகளும், ரொக்கமும் மும்பையின் விலே பார்லே பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
இவர் விரைவில் ஐஏஎஸ் தகுதிக்கு பதவி உயர்வு பெற இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பினாமி சட்டத்தின் படி, அதிகபட்ச தண்டனை ஏழு வருடம் சிறை மற்றும் பெரும் தொகை அபராதம் ஆகும். இவர் தண்டனை பெற்றால் இந்த சட்டத்தின் கீழ் தண்டனை பெறும் முதல் அரசு அதிகாரியாக விகாஸ் ரசல் இருப்பார்.