டில்லி
தாமாக முன்வந்து மூத்த குடிமக்கள் போல விட்டுத்தரலாம் என்று ரயில்வே அமைச்சகம் மற்ற பிரிவினரிடமும் கோரிக்கை வைத்துள்ளது.
ரயிலில் பயணம் செய்யும் மூத்த குடிமக்களுக்கு கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை அளிக்கப் படுகிறது. மூத்த குடிமக்கள் விரும்பினால் இந்த சலுகையை விட்டுத்தரலாம் என சில நாட்களுக்கு முன் ரயில்வே துறை அறிவித்தது. இது தொடர் பாக மூத்த குடிமக்கள் தங்கள் விருப்பத்தை தெரிவிப்பதற்கான வசதி, முன்பதிவுக்கான விண்ணப்பங்கள் மற்றும் இணைய தளத்தில் செய்யப்பட்டது.
மூத்த குடிமக்களைப் போலவே ராணுவத்தினர், உடல் ஊனமுற்றோர், பத்திரிகையாளர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டோர், கல்விச் சுற்றுலா செல்வோர் என மொத்தம் 53 வகையான பிரிவினருக்கு தற்போது கட்டணச் சலுகை அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில் சலுகையை விட்டுத்தருமாறு மூத்த குடி மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது போல், சலுகை அளிக்கப்படும் இதர பிரிவினருக்கும் கோரிக்கை விடுக்க ரயில்வே அமைச்சகம் ஆலோசித்து வருகிறது.
இது குறித்து ரயில்வே அமைச்சக அதிகாரிகள் சிலர் தெரிவித்ததாவது:
“சரக்கு ரயில்களில் லாபம் கிடைத்தாலும், பயணிகளுக்கான ரயில் போக்குவரத்தில் நட்டமே ஏற்படுகிறது. இதை ஈடு செய்யும் விதமாக கட்டண சலுகையை மற்றவர்களும் தாமாக முன்வந்து விட்டுத்தருவதற்கான வேண்டுகோள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. ஆனால் இன்னும் இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக மற்ற அமைச்சகங்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களின் பதில்களுக்காக காத்திருக்கிறோம்” என்றார்கள்.
ரயில் கட்டணச் சலுகை களை சம்பந்தப்பட்ட அமைச்சகங்களே ஏற்க வேண்டும் என்று அனைத்து அமைச்சகங்களுக்கும் கடந்த ஆண்டு நவம்பர் 24-ல் ரயில்வே அமைச்சகம் கடிதம் அனுப்பியது.
எடுத்துக்காட்டாக பத்திரிகை யாளர், உடல் ஊனமுற்றோர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டோர், மாணவர்கள் ஆகியோருக்கான சலுகைகளை முறையே செய்தி – மக்கள் தொடர்பு துறை, சமூக நீதித் துறை, சுகாதாரத் துறை, மனிதவள மேம்பாடுத் துறை ஆகியவை ஏற்கவேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. ஆனால் இதுவரை இதற்கு இதுவரை எந்த அமைச்சகமும் பதில் அளிக்கவில்லை.
இந்த நிலையில்தான் பயணிகளே முன்வந்து சலுகைகளை விட்டுக்கொடுக்கும் முறையை ரயில்வே அறிமுகப்படுத்தி இருக்கிறது..
பொதுவாக சலுகையை தாமாக முன்வந்து விட்டுக்கொடுக்கும் முறையை முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அறிமுகம் செய்தது. சமையல் எரிவாயு சிலிண்டர் மானியத்தை விட்டுத்தருமாறு கோரிக்கை விடுத்தது. இதையே தற்போதைய பாஜக அரசு பெரும் விளம்பரத்துடன் செய்தது.
இதே போல முந்தைய அரசில் எம்.பி.க்கள் மற்றும் மத்திய அமைச்சர்களும் தங்கள் விமானப் பயணங்களில் உயர்வகுப்புகளை தவிர்த்து, சாதாரண வகுப்பில் பயணம் செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை மட்டும் தற்போதைய மோடி அரசு கண்டுகொள்ளவில்லையே என்கிற ஆதங்கம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.