டில்லி:
ஐ.டி. நிறுவனங்கள் தொழிலாளர்களை பணி நீக்கம் செய்து வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. ஆனால், இதற்கு நிறுவனங்கள் மறுப்பு தெரிவித்தன. வழக்கமான நடைமுறை தான் விளக்கம் அளித்தன.
இந்நிலையில் டெக் மகிந்திரா நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளரை ராஜினாமா செய்யும் படி நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டு அதிகாரி மிரட்டும் ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த ஆடியோ இன்டர்நெட், சமூக வளைதளங்களில் வைரலாக பரவியது. இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆடியோவில் ‘‘மறுநாள் நாள் காலை 1௦ மணிக்கு ராஜினாமா கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும். இல்லை என்றால் பணி நீக்கத்தை சந்திக்க நேரிடும். பணி நீக்கம் செய்யப்பட்டால் அடிப்படை சம்பளம் கிடைக்காது.
அதனால் சொந்த விருப்பத்தில் பேரில் ராஜினாமா செய்துவிடுங்கள். இந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை. தங்களுக்கு வழங்கப்பட்ட ஆஃபர் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதன் அடிப்படையில் தான் இதை செய்கிறோம். அப்படி என்றால் ஏன் ஆஃபர் கடிதத்தை ஏற்றுக் கொண்டீர்கள்’’ என்று பேசியுள்ளார்.
இந்த ஆடியோ எப்போது பதிவு செய்யப்பட்டது என்ற விபரம் தெரியவில்லை. எந்த தொழிலாளியை மிரட்டினார் என்பது கண்டுபிடிக்க முடியவில்லை. 4 அல்லது 5 நாட்களுக்கு முன் பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இச்சம்பவத்திற்கு டெக் மகிந்திரா நிறுவன தலைவர் மகிந்திரா டுவிட்டரில் மன்னிப்பு கோரியுள்ளார்.
டுவிட்டரில் ‘‘ நான் இச்சம்பவத்திற்கு தனிப்பட்ட முறையில் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். தனி மனித மரியாதை பாதுகாப்பதே எங்களது முக்கிய மதிப்பாக கருதுகிறோம். எதிர்காலத்தில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடக்காது’’ என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நிறுவனத்தின் சிஇஓ குர்னானியின் பதிவு செய்யப்பட்ட ஆடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. டெக் மிகந்திரா துணைத் தலைவர் வினீத் நாயர் கூறுகையில், ‘‘நிறுவனத்தில் மனித வள மேம்பாட்டு துறை ஊழியருக்கும், மற்றொரு ஊழியருக்கும் இடையிலான உரையாடல் எங்களது கவனத்திற்கு வந்துள்ளது.
இதற்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம். இதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாது’’ என்று தெரிவித்துள்ளார்.