தாம்பரம்:
சென்னையை அடுத்துள்ள தாம்பரம் ஜூம்மா மசூதி இமாமை நீக்கியது தொடர்பாக இஸ்லாமியர்களுக்குள் நடந்த மோதலில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
சென்னையை அடுத்துள்ள தாம்பரம் ஜூம்மா மசூதி இமாம் மௌலவி அப்துல் கரீம் என்பவரை சமீபத்தில் மசூதி நிர்வாகம் நீக்கியது. நீக்கப்பட்ட இமாமுக்கு ஆதரவாக எஸ்.டி.பி.ஐ. அமைப்பைச் சேர்ந்த யாசர் அரஃபாத் என்பவர் தலைமையில் சிலர் இமாமுடன் மசூதிக்குச் சென்றனர். அவர்களுடன் ஐ.என்.எல். (கோனிக்கா பஷீர்) அமைப்பைச் சேர்ந்த சிலரும் சென்றனர்.
இவர்கள் மசூதி நிர்வாகத்துக்கு எதிராக முழக்கமிட்டனர்.
மசூதி நிர்வாகத்தினர், “இங்கே முழக்கமிடாதீர்கள். உங்கள் கருத்துக்களை மசூதி முத்தவல்லி நாகூர் கனியிடம் தெரிவியுங்கள்” என்று கூறினர்.
அப்போது யாசர் அரஃபாத், கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றி இரு தரப்பினருக்கும் கைகலப்பானது. பிறகு இரு தரப்பினருக்கும் சாமாதனம் செய்யப்பட்டு அனுப்பப்பட்டனர்.
மீண்டும் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதில் காதர் உசேன் என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதே போல எதிர்த்தரப்பைச் சேர்ந்த அக்பர் என்பவரும் காயமடைந்து மருத்து மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த மோதலைக் கண்டித்து இந்தி யதேசிய லீக் கட்சியின் மாநிலத் தலைவர் தடை ரஹீம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்லாமியர்களுக்குள் நடந்த இந்த மோதலுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியே காரணம். சமீபத்தில் எங்களது இந்திய தேசிய லீக் கட்சி வேலூர் மாவட்ட தலைவர் ஷவுகத் மீதும் இதே போல தாக்குதல் நடத்தியது.
இன்னொரு விசயம்.
தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூரில் ஆம்னி பேருந்துகளில் ஆட்களை ஏற்றிவிடும் பணியில் இருக்கும் யாக்கூப் மற்றும் அக்பர் குழுவினரிடையே ஏற்பட்ட தனிப்பட்ட முன் பகையை எஸ்.டி.பி.ஐ. அமைப்பு, வேறு விதத்தில் பயன்படுத்தி சமுதாய பிரச்சினையாக மாற்றி பதட்டத்தை ஏற்படுத்திவிட்டது.
இப்போது அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஒதுங்கிவிட்டார்கள்.
எஸ்.டி.பி.ஐ. அமைப்பினரை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
அதே நேரம், இஸ்லாமிய மக்கள் பெரும் ஆபத்தை எதிர்கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் வெவ்வேறு இயக்கங்களி்ல் இருந்தாலும் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்று தடா ரஹீம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.