சென்னை,

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய “பிக்பாஸ்” நிகழ்ச்சி விஜய் டிவியில் ஆரம்பமாகி, அனைவரை யும் ஈர்த்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியை விரும்பாதவர்கள்கூட ஆர்வமாக பார்க்கிறார்கள்.

இதில் கலந்துகொண்டிருப்பவர்கள் நாள் தோறும் பேசப்படும் மனிதர்களாகி விட்டார்கள்.

அதே நேரம், “அடுத்தவரை நோட்டமிடும் இந்த நிகழ்ச்சி தேவையா” என்ற விமர்சனமும் எழுந்திருக்கிறது. ஆனால் இந் நிகழ்ச்சியை விரும்புவோர், எரிச்சலடைவோர் என இரு தரப்பினருமே ஆர்வமாக பார்க்கிறார்கள் என்பது உண்மை.

இதில் இன்னொரு விசயம்…

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்படி விஜய் டிவி நிர்வாகம் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொண்டும் மறுத்திருக்கிறார் ஒருவர்.. அவர், திரைப்பட இயக்குநர் வ.கவுதமன். பெரும் தொகை அளிப்பதாகக் கூறியும் நாசூக்காக மறுத்திருக்கிறார் இவர்.

இவரது நலம் விரும்பிகளில் சிலர், “அடுத்த மாத குடும்ப செலவுக்கு என்ன செய்வது என்கிற கேள்வியோடுதான்  உனக்கு வாழ்க்கை நகர்கிறது. பெருந்தொகை தருவதாகச் சொல்கிறார்கள். அப்படியானால் கலந்துகொள்ள வேண்டியதுதானே” என்று கேட்டிருக்கிறார்கள்.

அதற்கு கவுதமன், “என்னைப் பற்றித் தெரியாதா? நான் தினமும் தொலைக்காட்சி செய்திகள் பார்ப்பவன்.  தினசரிகள் பார்ப்பவன். என்னால் நாட்டு நடப்புகளை தெரிந்துகொள்ளாமல் இருக்க முடியாது.

தவிர, தமிழக பிரச்சினைகள் குறித்து பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டு வருகிறேன்.

நூறு நாட்கள் உள்ளே அமர்ந்திருக்க என்னால் இயலாது. போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை சென்று  உள்ளே இருப்பது எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால் மக்களுடன் தொடர்பின்றி ஒரு நிகழ்ச்சிக்காக உள்ளே இருப்பதில் விருப்பமில்லை” என்று கூறிவிட்டார்.

தமிழகத்துக்குத் தேவையான பிக்பாஸ், கவுதமன்தான்!