டில்லி:
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டில் மிருக வதை நடந்ததாக உச்ச நீதிமன்றத்தில் பீட்டா வழக்கு தொடர்ந்துள்ளதை அடுத்து, ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் தடை விதிக்கப்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
உச்ச நீதிமன்றம் விதித்த தடையால், தமிழ்நாட்டில் இரண்டு வருடங்களாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படவில்லை. இதனால் கடந்த 2017 ம் ஆண்டு தமிழகத்தில் மாணவர்களும், இளைஞர்களும், பொதுமக்களும் பெருமளவில் திரண்டு போராட்டங்களை நடத்தினர்.
இதையடுத்து ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில், மிருகவதை தடுப்பு சட்டத்தின் சில பிரிவுகளில் திருத்தங்கள் கொண்டு வந்து தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து சட்டப் பேரவை சிறப்பு கூட்டத்தில் ஜல்லிக்கட்டுக்காக நிரந்தர சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப் பட்டது. .
பிறகு ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார். இதையடுத்து தமிழகத்தில் இந்த வருடம் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தன. இந்த நிலையில் தமிழகத்தில் இந்த வருடம் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டில் மிருக வதை நடந்ததாக பீட்டா அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பு தாக்கல் செய்துள்ள மனுவில், 2017ம் ஆண்டில் நடந்த ஜல்லிக்கட்டில் மிருக வதை நடந்ததாக கூறி சில ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது. மேலும் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஜல்லிக்கட்டு திருத்தச் சட்டத்தை ரத்து செய்யவும் வலியுறுத்தி உள்ளது.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டுக்கு எதிரான தீர்ப்புளே வந்துள்ள நிலையில் தற்போது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்கப்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.