சென்னை:
தமிழக திரைப்பட திரையரங்கு உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் திரையரங்குகளுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி மற்றும் கேளிக்கை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று 4வது நாளாக திரையரங்கு உரிமையாளர்கள், தியேட்டர்களை மூடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக அபிராமி ராமநாதன் தெரிவித்து உள்ளார்.
கேளிக்கை வரியை ரத்து செய்யக்கோரி தமிழகத்திலுள்ள திரையரங்கு உரிமையாளர்கள், திரையரங்குகளை மூடி கடந்த 4 நாட்களாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், இன்று அமைச்சர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதை தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை முதல் திரையரங்குகள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழக அரசுடன் நடத்திய பேச்சு வார்த்தையடுத்து, கேளிக்கை வரி குறித்து முடிவு செய்ய ஒரு குழு அமைக்கப்படும் எனவும், திரையரங்குகளை மூடியதால் ஒரு நாளைக்கு ரூ.20கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்தார்.