டாக்கா:
சிறுமியை வீட்டு வேலைக்கு அமர்த்தியது மற்றும் அவரை துன்புறுத்தியதற்காக பங்களாதேஷ் கிரிக்கெட் அணி வேகப் பந்து வீச்சாளர் ஷகாதத் ஹூசைனுக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
11 வயது சிறுமியை வீட்டு வேலைக்கு அமர்த்தியதோடு, அவரை தகாத வார்த்தைகளில் திட்டியது, அடித்து துன்புறுத்தியதாக இவர் மீதும், இவரது மனைவி நிருத்தோ ஷகாதத் மீதும் குற்றம்சாட்டப்பட்டது. கடந்த அக்டோபர் மாதம் முதல் இருவரையும் கைது செய்து விசாரித்து வந்தனர்.
ஷகாதத் கைது செய்யப்பட்டது முதல் அவரை சஸ்பெண்ட் செய்து பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்தது. அந்நாட்டு மகளிர் மற்றும் குழந்தைகள் அடக்குமுறை தடுப்புச் சட்டத்தின் கீழ் இருவருக்கும் தற்போது 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்ப்டடுள்ளது.
அடுத்து வரும் ஜனவரி 12ம் தேதி இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளனர். அந்த சிறுமி அளித்த வாக்குமூலத்தில்‘‘ கணவன் மனைவி இருவரும் குச்சியாலும், கரண்டியால் அடித்தும், கிள்ளியும் துன்புறுத்தினர். அவர்களால் பல துன்பங்களை அனுபவித்தேன்’’ என்று கூறியுள்ளார்.
முன்னதாக வீட்டில் இருந்து தப்பிய அந்த சிறுமி கடந்த செப்டம்பர் மாதம் தாகா சாலையில் உடைந்த கால்கள் மற்றும் காயங்களுடன் மீட்கப்பட்டார். இதன் பிறகு போலீசார் அவரது வீட்டில் சோதனையிட்டபோது இருவரும் தலைமறைவாகிவிட்டனர். பெற்றோர் வீட்டில் மறைந்திருந்த அவரது மனைவியை கைது செய்தவுடன், அடுத்த சில நாட்களில் ஷகாதத் சரணடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.