சென்னை,
நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டிருக்கும் ஜிஎஸ்டி வரி மற்றும் தமிழக அரசு விதித்துள்ள கேளிக்கை வரி காரணமாக தமிழகம் முழுவதும் சுமார் 1000க்கும் மேற்பட்ட திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.
இதன் காரணமாக நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். நாள்தோறும் சுமார் 10 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
திரையரங்குகளுக்கு மத்தியஅரசு ஜிஎஸ்டி வரியாக 28 சதவிகிதமும், மாநில அரசு கேளிகை வரியாக30 சதவிகிதமும் விதித்துள்ளது.
இதன் காரணமாக வரி மட்டுமே 58 சதவிகிதம் அதிகரித்துள்ளால், டிக்கெட்டின் விலை பல மடங்கு உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு டிக்கெட்டின் விலை உயர்த்தப்பட்டால், பொதுமக்கள் திரையரங்குக்கு வந்த படம் பார்ப்பது இயலாததாகும்.
மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரி மற்றும் தமிழக அரசு விதித்துள்ள கேளிக்கை வரி ஆகியவற்றுக்கு தமிழக திரைப்பட உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வரியை குறைக்க வலியுறுத்தி திரையரங்கு உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. கால வரையின்றி அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்பட்டு இருப்பதால், திரையரங்குகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
சென்னை நகரில் உள்ள அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. புதுச்சேரியிலும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் தங்கள் கோரிக்கைகள் குறித்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன் தலைமையில் ஒரு குழுவினர் நிதி அமைச்சர் ஜெயகுமாரை சந்தித்துப் பேசினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, நாங்கள் எங்கள் கோரிக்கைகளை நிதி அமைச்சரிடம் தெரிவித்தோம், அவர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் இது குறித்து விவாதித்து விரைவில் ஒரு நல்ல முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளார் கூறினார்.
இதனையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இப்பிரச்சனை குறித்து ஒரு நல்ல முடிவை எடுத்து அறிவிப்பார் எனவும் அவர் கூறினார்.
இதற்கிடையில் திரையரங்கு உரிமையாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தர முடியாது என்றும், திரைப்படங்களை டிடிஎச் மூலம் வெளியிட முடிவு செய்திருப்பதாக திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் கூறியிருந்ததார்.
ஆனால், அந்த தகவல் தவறானது என்றும் அபிராமி ராமநாதன் தெரிவித்தார்.