சென்னை:

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ. ரவிசங்கருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு கூறியது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதியில் திமுக சார்பில் 2001-ல் வெற்றி பெற்றவர் முன்னாள் எம்.எல்.ஏ. ரவிசங்கர். இவர் சென்னையில் அசோக்நகர் பகுதியில் ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் கொள்ளை அடித்த போது சிக்கினார். அதைத் தொடர்ந்து இவரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், இவர் மீது தமிழகம் முழுவதும் ஏகப்பட்ட வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் இருப்பது தெரிய வந்தது. இதனிடையே ரவிசங்கரை மாநில போதைப் பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு போலீசார் 2003-ம் ஆண்டு போதைப் பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக கைது செய்தனர். மண்ணடியில் ஓட்டல் ஒன்றில் ஆயிரத்து 500 கிராம் ஹெராயினை கடத்த முயற்சித்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டு இருந்தது.

இந்த வழக்கில் மதுரவாயலில் உள்ள அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தி 2 ஆயிரத்து 150 கிராம் ஹெராயினை பறிமுதல் செய்தனர். மேலும் இவரது கூட்டாளிகள் வெங்கடேஷ், ரகு, சங்கர், அர்ஜுன் ஆகியோரிடம் இருந்தும் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது.

மொத்தத்தில் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 4 ஆயிரத்து 200 கிராம் ஹெராயினின் மதிப்பு, சர்வதேச சந்தையில் ரூ.4.20 கோடியாகும். இந்த வழக்கில் அனைவரும் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். கடந்த 2004-ம் ஆண்டு மதுரையில் மற்றொரு வழக்கு தொடர்பாக நீதிமன்றத்துக்கு அழைத்து சென்ற போது ரவிசங்கர் தப்பி ஓடிவிட்டார்.

இதனால் அவர் மீதான போதைப் பொருள் கடத்தல் வழக்கு தனியாக பிரிக்கப்பட்டது. இந்த வழக்கு சென்னை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிமன்றம் ரவிசங்கருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து இன்று தீர்ப்பு கூறியது.