டெல்லி:
மும்பையில் கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி லக்ஷர் இ தொய்பா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் வெளிநாட்டு பயணிகள் உள்பட 166 பேர் கொல்லப்பட்டனர். 600 பேர் காயமடைந்தனர்.
மும்பை கொலாபாவில் நரிமன் சபாத் ஹவுஸ் பகுதியில் நடந்த இந்த தாக்குதலில் ராபி கேவ்ரியல், இவரது 5 மாத கர்ப்பிணி மனைவி ரிவ்கா உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர். இவர்களின் 2 வயது மகளான மோஷே ஹால்ட்ஸ்பெர்கை இந்திய ஆயம்மா சந்திரா சாமுவேல் என்பவர் 2 தீவிரவாதிகளிடம் இருந்து காப்பாற்றினார்.
தற்போது 11 வயதாகும் மோஷே ஜெருசலேத்தில் வசித்து வருகிறார். தற்போதும் சாமுவேல் மோஷேயுடன் தொடர்பில் இருக்கிறார். மோஷேக்கு கடந்த 2010ம் ஆண்டு இஸ்ரேலின் கவுரவ குடியுரிமை கிடைத்தது. வரும் ஜூலை 4ம் தேதி மாலை 2 நாள் பயணமாக பிரதமர் மோடி டெல் அவிவ் செல்கிறார்.
2 நாட்கள் ஜெருசலேத்தில் தங்கியிருக்கும் அவர் மோஷேவை சந்திக்க திட்டமிட்டுள்ளார். ஜெருசலேமில் இருந்து 90 கி.மீ தொலைவில் உள்ள வடக்கு டெல் அவிவ் பகுதியில் அபுலா என்ற இடத்தில் மோஷே தனது தாய் வழி தாத்தா பாட்டியுடன் வசித்து வருகிறார்.
இந்த சந்திப்பு 5ம் தேதி நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், நேரம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கு இடையே 25 ஆண்டு காலமாக ராஜாங்க ரீதியிலான உறவு உள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி இந்தியா வந்த இஸ்ரேல் அதிபர் ரெயூவென் ரிவ்லின் மும்பை தாக்குதல் நடந்த கொலாபாவில் நரிமன் சபாத் ஹவுஸ் சென்று பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.