இந்தியாவுக்கே முன்னுதாரணமாக நதி நீர் இணைப்புத் திட்டம் தமிழகத்தில் 2009ம் ஆண்டே துவங்கிவிட்டது. ஆகவே நதி நீர் இணைப்புக்காக தான் அளிப்பதாகக் கூறிய ஒரு கோடி ரூபாயை தமிழக அரசிடமோ, மத்திய அரசிடமோ ரஜினி அளிக்கலாம் என்று விவசாய ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.
உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்துக்கு கர்நாடகம் காவிரி நீரைத் திறந்து விட வேண்டும் என்று கோரி கடந்த 2002ம் ஆண்டு தமிழகம் முழுதும் பல அமைப்பினர் போராட்டம் உண்ணாவிரதங்களை நடத்தி வந்தனர். அப்போது இதே கோரிக்கையை வலியுறுத்தி நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உண்ணாவிரதம் இருந்தார். பிறகு, “நதி நீர் இணைப்புக்காக எனது சொந்தப் பணத்தில் இருந்து ஒரு கோடி ரூபாய் அளிக்கிறேன்” என்று தெரிவித்தார்.
அதன் பிறகு இது குறித்து பேச்சுக்கள் எழும்போதெல்லாம் ரஜினி மவுனம் காத்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த வருடம் விவசாய அமைப்பு ஒன்றின் தலைவர் அய்யாக்கண்ணு, “நதி நீர் இணைப்புக்காக ஒரு கோடி ரூபாய் அளிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்து ஆண்டுகள் பல கடந்துவிட்டன. தான் அறிவித்தபடி அவர் மத்திய அல்லது மாநில அரசிடம் ஒரு கோடி ரூபாயை அளிக்க வேண்டும்” என்று தெரிவித்தார். மேலும் இதற்கு ஒரு மாத கால அவகாசம் அளிப்பதாகவும் அதன் பிறகும் ரஜினி காலம் தாழ்த்தினால் அவரது வீட்டின் முன் போராட்டம் நடத்துவோம் என்றும் தெரிவித்தார். இது குறித்து ரஜினிக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் அய்யாக்கண்ணு கூறினார்.
அதன் பிறகு அய்யாக்கண்ணு வேறு போராட்டங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அய்யாக்கண்ணுவை தனது போயஸ் இல்லத்துக்கு அழைத்து பேசினார் ரஜினிகாந்த். அப்போதும் ரஜினி, “ஒரு கோடி ரூபாய் தரத் தயார்” என்று அய்யாக்கண்ணுவிடம் தெரிவித்தார்.
இந்த நிலையில், “நதி நீர் இணைப்பு பணிகள் துவங்கப்படாத நிலையில் ரஜினி எப்படி ஒரு கோடி ரூபாயை தருவார்” என்று அவரது ஆதரவாளர்கள் சமூகவலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இதற்கு விவசாய ஆர்வலர்கள் அளிக்கும் பதில் வருமாறு:
“ரஜினி ரசிகர்கள் அறியாமையில் இருக்கிறார்கள். இந்திய நதிகளை இணைக்கும் திட்டத்துக்கு முன்னோடியாக தமிழகம் 2009ம் வருடமே தனது செயல்பாட்டைத் துவங்கிவிட்டது.
திருநெல்வேலி பகுதியில் பாயும் தாமிரபரணி மற்றும் அதன் துணை ஆறுகளிலிருந்து சுமார் 50 ஆயிரம் மில்லியன் கன அடி தண்ணீர் மழைக்காலங்களில் வீணாகக் கடலில் கலக்கிறது. இந்த உபரி நீரை தாமிரபரணி ஆறு, கருமேனி ஆறு, நம்பியாறு, பச்சையாறு, கோரையாறு, எலுமிச்சையாறு ஆகிய 6 நதிகள் வழியாக நீர் வளம் குறைந்த பகுதிகளுக்கு கொண்டு செல்லும் “நதிநீர் இணைப்பு திட்டத்தை” 2009ம் ஆண்டே அப்போதைய முதல்வர் கருணாநிதி துவக்கி வைத்தார்.
இத்திட்டத்திற்கு வெள்ள நீர் கால்வாய் திட்டம் என்று பெயர். இதன் மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 23,040 ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறுவதுடன், 50 கிராமங்கள் பயன்பெறும். இத்திட்டத்தின்படி தாமிரபரணியாறு, கருமேனியாறு, நம்பியாறு, எம்.எல்.தேரி இணைப்புக்காக 369 கோடி ரூபாயில் திட்டம் உருவாக்கப்பட்டது.
இத் திட்டப் பணிகள், 2011ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி முடிவடையும் வரை சிறப்பாக நடந்துவந்தது.
அடுத்து ஜெயலலிதா தலைமையிலான அரசு அமைந்தவுடன் இத்திட்டப்பணிகள் தொய்வடைந்தன” என்கிறார்கள் விவசாய ஆர்வலர்கள்.
மேலும் அவர்கள், “2009ல் காவேரி – வைகை – குண்டாறு இணைப்புத் திட்டம் தொடங்கி, அதன் முதல் பகுதியான மாயானூரில் தடுப்பணை கட்டும் பணி 2014ல் முடிவடைந்து விட்டது.
அதேபோல, தாமிரபரணி- நம்பியாறு – கருமேனியாறு – இணைப்புத் திட்டம் 2 நிலைகள் முடிவடைந்து, பணம் இல்லை என்று சொல்லி கிடப்பில் போடப்பட்டுள்ளது. பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று திமுக அப்பாவு நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணையில் உள்ளது” என்கிறார்கள்.
அதோடு, “தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு, முந்தைய ஜெயலலிதா ஆட்சி காலத்தில் முடங்கிக் கிடந்த பல பணிகளை நிறைவேற்றி வருகிறது.
சென்னை அண்ணா நூலகத்துக்கு நிதி ஒதுக்கீடு, துறைமுகம் – மதுராயல் பறக்கும் சாலை பணிகள் துவக்கம் போன்றவற்றை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.
ஆகவே நதி நீர் இணைப்பில் மிக ஆர்வமாக இருக்கும் ரஜினிகாந்த், ஏற்கெனவே 2009ம் ஆண்டே துவக்கப்பட்டுவிட்ட நதி நீர் இணைப்பு திட்டமான “
வெள்ள நீர் கால்வாய் திட்ட”த்தை தொய்வின்றி தொடர எடப்பாடி அரசிடம் ஒரு கோரிக்கை வைத்தால் போதும். அத்திட்டம் மீண்டும் முனைப்புடன் செயல்படத் துவங்கும். தவிர முதல்வர் எடப்பாடியிடமே, நதி நீர் இணைப்புக்கான தனது பங்காக ஒரு கோடி ரூபாயை ரஜினி அளிக்கலாம்” என்று தெரிவிக்கிறார்கள் விவசாய ஆர்வலர்கள்.