ஐதராபாத்,

நாட்டில் தற்போது வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று, மோசடி அதிகரித்து வருகிறது. ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் வாடகை தாய்மார்கள் மூலம் குழந்தைபெற்று மோசடியில் ஈடுபட்ட மருத்துவமனை சீல் வைக்கப்பட்டது.

அங்கிருந்து 46 வாடகை தாய்மார்கள் மீட்கப்பட்டனர்.

ஐதராபாத்தின் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் செயல்பட்டு வந்த சாய் கிரண் குழந்தை பேறு மருத்துவமனை சட்டவிரோதமாக கருத்தரிப்பு செய்து வந்துள்ளது. இதுகுறித்து புகார்கள் வந்ததை தொடர்ந்து  தெலுங்கானா மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் சாய் கிரண் மருத்துவமனையில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது மருத்துவமனைக்குள் வாடகைத் தாய்மார்கள் 46 பேர் அடைத்து வைக்கப்பட்டிருப்பதை  கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அனைவரும் 9 மாதம் கர்ப்பமாக இருப்பதையும், கடந்த 9 மாதமாக அவர்கள் அங்கேயே அடைத்து வைத்திருப்பதையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

மேலும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறச் செய்ய சாய் கிரன் மருத்துவமனை அனுமதி பெறவில்லை என்பது தெரிய வந்தது.

இதனை அடுத்து அந்த மருத்துவமனைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

மேலும் மீட்கப்பட்ட வாடகைத் தாய்மார்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

போலீசார விசாரணையில், இரண்டரை லட்சம் ரூபாய் முதல் மூன்றரை லட்சம் ரூபாய் வரை பணம் கொடுத்து தங்களை குழந்தை பெற்றுக் கொடுக்க சாய் கிரண் மருத்துவமனை அழைத்து வந்ததாக தெரிவித்துள்ளனர்

. அதே சமயம் குழந்தை இல்லாமல் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற வந்த தம்பதியினரிடம் சாய் கிரண் மருத்துவமனை நிர்வாகம் 40 லட்சம் ரூபாய் வரை வசூலித்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நாடு முழுவதும் தற்போது இதுபோன்ற வாடகை தாய் மோசடி அதிக அளவில் நடைபெற்று வருவதாக ஆய்வுகள் கூறி வருகின்றன.

இதைத்தொடர்ந்து மத்தியஅரசின் சுகாதாரத்துறை, நாடு முழுவதும் சுமார்  2,000 மருத்துவமனை கள்  அனுமதி இல்லாமல் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்து மோசடி செய்து வருவதாக கூறி உள்ளது.

இதுகுறித்து கண்காணிக்கப்பட்டு,  சட்ட விரோதமாக, வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றெடுக்க உதவுபவர்களுக்கு, 10 லட்சம் ரூபாய் அபராதமும், 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வகை செய்யும் சட்டத்திருத்தத்தை கடந்த ஆகஸ்டு மாதம்  மத்திய அரசு  கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது.