மிழக திரையரங்குகளில் டிக்கெட் விலையை விட, நொறுக்குத்தீனிகளின் விலை அதிகமாக இருக்கிறது, இங்கு இளநீர் உட்பட இயற்கை “குளிர்பாணங்கள்“ விற்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்த ஆதங்கமும் நிலவுகிறது. இவை  குறித்து தமிழ் திரைப்பட வர்த்தக சபை தலைவரும், தமிழ்நாடு திரைப்பட உரிமையாளர்கள் சங்க தலைவரும் சென்னை அபிராமி மால் உரிமையாளருமான அபிராமி ராமநாதனை தொடர்புகொண்டு கேட்டோம்.

அதற்கு அவர், “அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிகமாக வசூலிக்கும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரம் பொதுவாக அப்படி நடப்பதில்லை” என்றார்.

“ஸ்டார்கள் படங்களுக்கு அப்படித்தானே நடக்கிறது. சமீபத்தில் வெளியான கபாலி உட்பட..”

“சென்னையில் அப்படி நடந்திருக்காது. லயன்ஸ், ரோட்டரி கிளப் போன்ற தன்னார்வ நிறுவனங்கள் அவர்கள் செய்யும் நல்ல காரியங்களுக்காக சில தியேட்டர்களில் இருந்து மொத்தமாக டிக்கெட் வாங்கி அதிக விலைக்கு விற்கிறார்கள். மற்றபடி டிக்கெட் விலை அதிகமாக விற்கப்படுவதற்கும் தியேட்டர்களுக்கும் தொடர்பில்லை.”

“அபிராமி” ராமநாதன்

“தியேட்டர்களில் ரசிகர்கள் கொண்டுவரும் உணவுப் பொருட்கள் தடுக்கப்படுகின்றன. தியேட்டர் கேண்டீனில் ஸ்நாக்ஸ் விலை மிக அதிகமாக இருக்கிறது.. இது ஏன்”

“ரசிகர்கள் கொண்டுவரும் ஸ்நாக்ஸ்களை தியேட்டருள் அனுமதித்துக்கொண்டுதான் இருந்தோம்.  ஆனால் சமூகவிரோதிகள் தங்கள் கொண்டுவரும் குளிர்பாணத்தில் மயக்க மருந்து கலந்து அருகில் இருப்பவர்களுக்கு கொடுத்து, அவர்களது நகை பணத்தை திருடிச் செல்வது நடந்தது. அதனால் அனுமதிப்பதில்லை.

கேன்டீன்களை திரையரங்க உரிமையாளர்கள் நடத்துவதில்லை. காண்ட்ராக்ட் விட்டுவிடுகிறோம். ஒரு காட்சியில் இடை வேளை நேரமான 20 நிமிடங்கள்தான் ஸ்நாக்ஸ்களை விற்க முடியும். மொத்தம் ஒரு நாளைக்கு 80 நிமிடங்கள்தான் விற்பனை. ஆனால் நாள் முழுதுக்கும் பணியாட்களை நியமிக்க வேண்டியிருக்கிறது. அவர்களுக்கு முழு சம்பளம் தர வேண்டியிருக்கிறது. அதனால்தான் ஸ்நாக்ஸ் விலை அதிகமாக இருக்கிறது”

“கோக் பெப்சி போன்ற செயற்கை பாணங்களே தியேட்டர் கேண்டீனில் விற்கப்படுகின்றன. இளநீர் போன்றவற்றை விற்கலாமே..”

“ஏற்கெனவே திரையரங்குகளில் இளநீர் விற்பனை செய்தோம். கோவையில் இருந்து மிசின் அளித்தார். இளநீரை அதில் விட்டால் தண்ணீர் மட்டும் வெளியாகும். நன்றாக விற்பனை ஆனது. தினமும் ம் 300 இளநீர்கள் வரை விற்றது.

ஆனால் மாநகராட்சி துப்புரவு ஊழியர்கள், அந்த தேங்காய் மட்டைகளை எடுக்க முடியாது என மறுத்துவிடுகிறார்கள். மற்ற குப்பைகளை எடுக்கலாம், தேங்காய் மட்டைகளை எடுத்தால் அதுவே லாரியில் பாதியை அடைத்துவிடுகிறது என்றார்கள்.

அதனால் இளநீர் விற்பனை செய்ய முடியவில்லை.

அதே நேரம், கோவில்பட்டி கடலை மிட்டாய், நெல்லை அல்வா போன்றவற்றை விற்கலாம்.” என்றார் அபிராமி ராமநாதன்.