மும்பை,
உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 24 ஆண்டுகளுக்கு பிறகு இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.
1993 ம் ஆண்டு மும்பையில் 12 இடங்களில் அடுத்தடுத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த கொடூர தாக்குதல்களில் 257 பேர் பலியாகினர். 713 பேர் படுகாயம் அடைந்தனர்.
பயங்கரவாத மற்றும் சீர்குலைப்பு செயல்கள் தடுப்பு பிரிவு கோர்ட்டில் இது தொடர்பான வழக்கு 24 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. குற்றவாளிகள் என கருதப்பட்டவர்களில் பலர் இன்னும் கைது செய்யப்படாத நிலையில், முதலில் நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து 2006ம் ஆண்டு 100 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டது.
தொடர்ந்து குற்றவாளிகளை தேடும் படலம் நடைபெற்றதான் வாயிலாக 2010 ம் ஆண்டு வரை மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீதான வழக்கு தனியாக விசாரிக்கப்பட்டு வந்தது.
இந்த வழக்கில் 24 ஆண்டுகளுக்கு பின் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. குற்றவாளிகள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனார், இதில் விசேஷம் என்னவென்றால், இன்று தீர்ப்பு கூறப்பட உள்ள குற்றவாளிகள் 7 பேரில் ஒருவர் கூட தற்போது போலீஸ் காவலில் இல்லை. ஆகவே, அவர்கள் இன்று கோர்ட்டில் ஆஜரா வார்களா என்பதும் கேள்விக்குறியே….
இந்த தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக கூறப்பட்டுள்ளவர்களில் 33 குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை என்பதும் கூடுதல் தகவல்.
இந்த கொடூர குண்டுவெடிப்புக்கு காரணகர்த்தாவான, தற்போது பாகிஸ்தான் அரசு பராமரிப்பில் பதுங்கி இருக்கும் நிழலுக தாதா தாவூத் இப்ராஹிம், அவரது சகோதரர் அனீஸ் இப்ராஹிம், முஸ்தபா, டைகர் மேமுன் ஆகியோர் அடங்குவர்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளதை அடுத்து, கோர்ட் வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.