சென்னை,
தமிழக சட்டமன்றத்தில் தற்போது மானிய கோரிக்கை விவாதம் கூட்டம் நடைபெற்று வருகிறது. இன்றைய 3வது நாள் கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வெளிநடப்பு செய்தார்.
தமிழக சட்டப்பேரவையின் மானியகோரிக்கை கூட்டம் 14ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. முதல் நாள் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எடப்பாடி அரசு பெரும்பான்மையின்போது, அதிமுக உறுப்பினர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது குறித்து, அதிமுகவை சேர்ந்த மதுரை சரவணன் பேசிய வீடியோ ஆங்கில தொலைக்காட்சி ஒன்றில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து விவாதிக்க திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்திருந்தது. அதுகுறித்து சபையில் விவாதிக்க ஸ்டாலின் சபாநாயகரை வற்புறுத்தினார். ஆனால், சபாநாயகர் இதுகுறித்த வழக்கு கோர்ட்டில் இருப்பதால் விவாதிக்க முடியாது என்று கூறினார்.
இதையடுத்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அவர்களை வெளியேற்ற சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்த நேற்றை கூட்டத்தின்போது, எதிர்க்கட்சி தலைவர், இதுகுறித்து விவாதிக்க வற்புறுத்தினார். ஆனால் சபாநாயகர், ஆதாரம் இருந்தால் மட்டுமே விவாதிக்க முடியும் என்ற கூறி, விவாதிக்க மறுத்ததை தொடர்ந்து நேற்றும் திமுக உள்பட எதிர்க்கட்சியினர் சபையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில் இன்று 3வது நாளாக சட்டமன்றம் சென்ற திமுக உறுப்பினர்கள், ஜீரோ ஹவரின் போது, பண பேரம் குறித்து விவாதிக்க வற்புறுத்தினார். அப்போது, சபாநாயகர் ஏற்கனவே தெரிவித்தபடி, ஆங்கில தொலைக்காட்சியில் வெளியான வீடியோ ஆதாரத்தை கொண்டு வந்திருப்பதாக, சபாநாயகரிடம் காட்டி விவாதிக்க வலியுறுத்தினார்.
ஆனால், அதுகுறித்து விவாதிக்க முடியாது என மீண்டும் சபாநாயகர் முரண்டுபிடித்ததை தொடர்ந்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.
அதைத்தொடர்ந்து திமுக கூட்டணி கட்சியின காங்கிரசும் வெளிநடப்பு செய்தது.