தனியார் தொலைக்காட்சியில் வெளியான வீடியோவால் சர்ச்சைக்குள்ளான மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன், “ அந்த வீடியோவில் இருப்பது நான்தான். ஆனால் குரல் என்னுடையது அல்ல. யாரோ டப்பிங் கொடுத்திருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு செல்லாமல் இருக்க கூவத்தூரில் தங்கியிருந்த அ.திமு.க. எம்எல்ஏக்களுக்கு பணம் தரப்பட்டதாக மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் பேசியதாக வீடியோ பதிவு ஒன்று வெளியானது. தனியார் தொலைக்காட்சி வெளியிட்ட இந்த வீடியோவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அந்த வீடியோவில், “சொந்த ஊரில் இருந்த வந்த எம்எல்ஏக்களை விமான நிலையத்தில் மடக்கி ரூ.2 கோடி தருவதாக சசிகலா தரப்பினர் கூறினர். எம்எல்ஏ விடுதியில் இருந்து ஆளுநர் மாளிகை சென்றபோது ரூ.4 கோடியானது. கூவத்தூர் விடுதியில் தங்க வைத்தபோது ரூ.6 கோடி தருவதாக உறுதி அளித்தனர். ஒரே நேரத்தில் பணமாக திரட்ட முடியாது என்பதால் தங்கமாக தருவதாகக் கூறினர். இது வசதிதானே என என் மனைவியிடம் போனில் தெரிவித்தேன்.
இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்ற பிற கட்சி எம்எல்ஏக்களுக்கு ரூ.10 கோடி பேரம் பேசப்பட்டது. ஓபிஎஸ் முதல்வரானால் நாங்கள் 11 பேரும் (ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள்) அமைச்சர்களாகி விடுவோம். ரூ.500 கோடிதான் எங்கள் இலக்கு” என சரவணன் பேசியதாக அந்த வீடியோவில் இருந்தது.
இந்த நிலையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், தொலைக்காட்சியில் வெளியான வீடியோ தொடர்பாக சரவணனிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சரவணன் சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பி.எஸ்., வீட்டுக்குச் சென்றார். அங்கு ஓபிஎஸ்.,ஸிடம் அவர் வீடியோ தொடர்பாக விளக்கமளித்தார்.
ஓ.பி.எஸ்ஸை சந்தித்துவிட்டு வந்த சரவணன், “அந்த வீடியோவில் இருப்பது நான்தான். ஆனால் நான் பேசியதை மாற்றி வேறு யாரோ டப்பிங் பேசியிருக்கிறார்கள். அதில் உள்ளது போல நான் பேசவே இல்லை” என்று தெரிவித்தார்.
இதே சரவணன் நேற்று, ‘அந்த வீடியோவுக்கும், எனக்கும் துளியும் சம்பந்தம் இல்லை’ என்று தெரிவித்திருந்தார். இப்போது அதில் இருப்பது நான்தான் குரல்தான் வேறு யாரோ என்கிறார்.