சென்னை,
அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலாவின் கோரிக்கையை நிராகரித்து எழும்பூர் நீதி மன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
அமலாக்கத்துறை குறித்த வழக்கில் சிக்கியுள்ள சசிகலா, தற்போது சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.
இந்நிலையில், அமலாக்கத்துறையின் வழக்கின் விசாரணை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
கடந்தமுறை விசாரணையின்போது, சசிகலா நேரில் ஆஜராக முடியாததால், அமலாக்க துறை தன்னிடம் கேட்க வேண்டிய கேள்விகளை முன்கூட்டியே தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
சசிகலாவின் இந்த கோரிக்கையை சென்னை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
வழக்கு:
ஜெ.ஜெ., ‘டிவி’க்கு வெளிநாட்டில் இருந்து உபகரணங்களை இறக்குமதி செய்ததில், அன்னிய செலாவணி மோசடி நடந்துள்ளதாக, சசிகலா மற்றும் பாஸ்கரன் மீது அமலாக்க துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கு, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில், 20 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.
தற்போது இந்த வழக்கு குறித்து விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. விசாரணையின்போது, அமலாக்கத்துறை தன்னிடம் கேட்கப்பட உள்ள கேள்விகளை தனக்கு முன்கூட்டியே அளிக்க வேண்டும் என கோரி, சசிகலா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறி, சசிகலாவின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.