சென்னை,
மகாராஷ்டிராவில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய அரசு முன்வந்திருப்பதுபோல தமிழகத்திலும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும், விளைபொருட்களுக்கு ஆதரவு விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும் என மகாராஷ்டிர மாநில விவசாயிகள் போராடி வந்தார்கள்.
அந்தப் போராட்டத்தின் தாக்கம் மத்தியப் பிரதேசத்திலும் ஏற்பட்டதால் அங்கும் விவசாயிகளின் போராட்டம் வெடித்தது. அதில் ஆறு விவசாயிகள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
விவசாயிகளின் கிளர்ச்சி தீவிரமடைவதைக் கண்டு அச்சமடைந்த பா.ஜ.க. தலைமையிலான மகாராஷ்டிர மாநில அரசு இப்போது விவசாயக் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய முன் வந்திருக்கிறது.
அதன் வழிமுறைகளை ஆராய்ந்து பரிந்துரைப்பதற்கு குழு ஒன்றை அமைத்து அம்மாநில முதல்-மந்திரி பாட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார். இது வரவேற்கத்தக்கது.
2014-ம் ஆண்டு புள்ளி விவரப்படி தமிழ்நாட்டில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் 895 பேர் தற்கொலை செய்து கொண்டனர். விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் தற்கொலையில் இந்தியாவிலேயே 4-வது இடத்தில் தமிழகம் இருந்தது.
2015-ல் தற்கொலை செய்து கொண்டோரின் எண்ணிக்கை 606 ஆக இருந்தது என்ற போதிலும் கடந்த 2016-ம் ஆண்டு மழை பொய்த்துப் போனதால் ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். அதன் முழுமையான விவரங்களை இன்னும் அரசு வெளியிடவில்லை.
விவசாயக் கடன்களை முற்றாகத் தள்ளுபடி செய்ய வேண்டுமெனத் தமிழ்நாடு விவசாயிகளும் தொடர்ந்து போராடி வருகின்றனர். அந்தப் போராட்டமே இந்தியாவெங்கும் விவசாயப் போராட்டங்களுக்கு தூண்டுதலாக அமைந்தது.
இப்போது மகாராஷ்டிர மாநில விவசாயிகளின் போராட்டம் வெற்றி கண்டிருக்கிறது. ஆனால் தமிழக அரசு இன்னும் விவசாயிகளின் கோரிக்கைகளை அலட்சியம் செய்து வருகிறது.
இனி மேலும் காலம் கடத்தாமல் மகாராஷ்டிர மாநில அரசைப் போலவே தமிழக அரசும் அனைத்து விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.