மான்ட்சர்,
விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் நடைபெற்ற வன்முறையின்போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 5 விவசாயிகள் பலியாகினர். இதன் காரணமாக மாநிலம் முழுவதும் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.
இந்நிலையில் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மத்தியப் பிரதேச மாநிலம் மான்ட்சருக்கு சென்று, இறந்த விவசாயிகள் குடும்பத்தினருக்கு ஆறுதல் செல்ல முயன்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது.
ராகுல் செல்ல அனுமதி மறுத்ததை தொடர்ந்து, சாலை வழியாக இன்று மான்ட்சர் அடைந்தே தீருவோம் என்று ராகுல் காந்தி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
ஆனால் விவசாயிகள் போராட்டத்தை அரசியலாக்க முயற்சிப்பதாக ராகுல் மீது பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
ராகுல் காந்திக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துள்ள நிலையில், தடையை மீறி இன்று மாண்ட்சர் செல்ல இருப்பதாக ராகுல் கூறியுள்ளதால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
ஏற்கனவே விவசாயிகள் போராட்டம் காரணமாக பல இடங்களில் பஸ்கள், லாரிகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. மாநிலம் முழுவதும் காங்கிரசாரும் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ராகுல் வருவதையொட்டி மாநிலம் முழுவதும் இருந்து காங்கிரஸ் தொடர்கள் மான்ட்சர் நோக்கி வந்துகொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.