மலப்புரம்:

கேரள மாநிலத்தில் உள்ள இந்து கோயில் ஒன்றில் நடந்த இப்தார் விருந்தில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ளது லட்சுமி நரசிம்ம மூர்த்தி விஷ்ணு கோயில். இங்கு, இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலானை முன்னிட்டு இப்தார் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த விருந்தில் சுமார் 400 இஸ்லாமியர்களும், நூற்றுக்கும் மேற்பட்ட இதர மதத்தினரும் உற்சாகமாக கலந்துகொண்டனர்.

இது குறித்து கோயில் நிர்வாகம், “நாங்கள் முக்கியத்துவம் கொடுப்பது, மனிதநேயத்திற்கு தான். மதத்திற்கு அல்ல. அவரவர் மதத்தை அவரவர் பின்பற்றுகிறார்கள். ஆனாலும் நாம் அனைவரும் சகோதரர்கள்தான்” என்று தெரிவித்துள்ளது.

இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கக்கூடிய வெட்டிச்சிரா பகுதியில் இந்த கோயில் அமைந்துள்ளது.  தற்போது  கோயிலை புதுப்பிக்கும் பணி நடந்துவருகிறது. இதற்கு சுமார் 300 இஸ்லாமிய குடும்பங்கள் நிதியுதவி அளித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.