டில்லி,

பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு 6 நாட்கள் சுற்றுப்பயணம் இன்று மேற்கொள்கிறார்.

பிரதமர் மோடி மீண்டும் தனது வெளிநாட்டு பயணத்தை தொடங்கி உள்ளார்.

கடந்த சில மாதங்களாக வெளிநாட்டு பயணங்களை ஒத்திவைத்திருந்த பிரதமர் மோடி, கடந்த வாரம் இலங்கை சென்றார். அதைத்தொடர்ந்து தற்போது மீண்டும் தனது வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை தொடங்கி உள்ளார்.

ஜெர்மனி, ஸ்பெயின், ரஷ்யா மற்றும் பிரான்ஸ் நாடுகளில 6 நாட்கள் அரசு முறைப் பயணமாக, பயணமாகிறார்.பிரதமர் நரேந்திர மோடி.

இன்று டில்லியில் இருந்து  வெளிநாட்டுக்கு தனி விமானம் மூலம் புறப்படும் மோடி முதலில் ஜெர்மனிக்கு செல்கிறார். அங்கு மெஸ்பெர்க் நகரில் அந்நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்கல் மற்றும் அதிபர் ப்ராங்க் வால்டர் ஸ்டீன்மியர் ஆகியோரை சந்திக்கிறார்.

அங்கு வர்த்தகம், பாதுகாப்பு, அறிவியல் தொழில்நுட்பம், நகர்ப்புற கட்டமைப்பு, ரயில்வே மற்றும் விமானப் போக்குவரத்து துறைகளில் கூடுதல் ஒத்துழைப்பு குறித்து மெர்க்கலுடன் ஆலோசனை நடத்த இருப்பதாக பிரதமர் மோடி தனது டுவிட்டர்  பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பெர்லின் நகரில் தொழிலதிபர்களுடன் வர்த்தகம், முதலீடு தொடர்பாக மெர்க்கலும், மோடியும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

அதையடுத்து, நாளை  ஸ்பெயின் செல்லும்  மோடி, அங்கு பிரதமர் மரியானா ரஜோயுடன் பொருளாதாரம், வர்த்தகம் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

அதைத்தொடர்ந்து 31ம் தேதி ரஷ்யா செல்லும் பிரதமர் மோடி, வருகிற 2-ம் தேதி வரை ரஷ்யாவில் தங்குகிறார்., அங்கு  அதிபர் புதினுடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

ஜூன் 1-ம் தேதி ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் சர்வதேச பொருளாதார மாநாடு தொடங்குகிறது. இந்த மாநாடு 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள் கலந்துகொள்கிறார்கள். இதில் மோடியும் கலந்துகொள்கிறார்.

அதையடுத்து ஜூன் 2-ம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் செல்லும் பிரதமர் மோடி, புதிய அதிபர் இம்மானுவெல் மேக்ரானுடன் இரு நாட்டு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.