பேருந்துகளிலும், ரெயில்களிலும் இருக்கை சண்டை என்பது அன்றாட நிகழ்வாகிவிட்டது. நம் நாட்டு பேருந்து, ரெயில்களில் சிறிய அளவில் அமைக்கப்பட்டுள்ள 3 பேர் அமரும் இருக்கையானாலும் சரி, 2 பேர் அமரும் இருக்கயானாலும் சரி இடநெருக்கடி காரணமாக இத்தகைய தகராறுகள் நடக்கும்.

 

இதேபோல் திரையரங்குளிலும்,‘‘ முன் சீட்டின் மீது கால் வைக்காதீர்கள்’’ என்று ஸ்லைடு விளம்பரம் போட்ட காலங்களும் உண்டு. இந்த தகராறுகளையும் சினிமா தியேட்டர்களில் பார்க்க முடியும்.

இதேபோன்ற சண்டை தற்போது விமானங்களில் நடக்கிறது. ஒரு பயணி விமானத்தின் சாய்வு தன்மை கொண்ட இருக்கைக்காக கட்டணத்தை செலுத்துகிறார். அந்த பயணி இருக்கையில் அமர்ந்து சாயும் போது, அது பின்னால் இருக்கையில் அமர்ந்திருக்கும் பயணிக்கு இடையூறாக அமைந்துவிடுகிறது.

இதனால் பின்னால் இருப்பவர் கால் வைக்க முடியாமல், அவரது கால் முட்டி இருக்கும் பகுதியை முன் இருக்கை ஆக்ரமித்து விடுகிறது. இதனால் கால் வைக்க பயன்படுத்தப்படும் பகுதி யாருக்கு சொந்தம் என்ற சர்ச்சை எழுகிறது.

அதேபோல் பின் இருக்கையில் இருப்பவர்கள் கால்களை முன் இருக்கையின் பின்னால் வைத்துக் கொள்ளும் சம்பவங்களுக்கு நடக்கிறது. இருக்கையின் பின்னால் வைக்கப்படும் உணவு டிரே, டிவி மானிட்டர் போன்றவற்றை பின் இருக்கையில் இருப்பவர் தான் பயன்படுத்துகிறார். இதனால் இந்த பின் பகுதி யாருக்கு சொந்தம் என்ற பிரச்னை நீண்ட நாட்களாக நீடித்து வருகிறது.

இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க அந்த குறிப்பிட்ட கால் வைக்கும் பகுதியை ஏலம் விட்டு கூடுதலாக கேட்கும் பயணிகளுக்கு ஒதுக்கீடு செய்வது தொடர்பாக சர்வே நடத்தப்பட்டது. 6 மணி நேரம் கொண்ட ஒரு விமானம் நியூயார்க் நகரில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு செல்லும் பயணத்தில் இது செயல்படுத்தப்பட்டது.

இருக்கை சாயும் வசதியை பயன்படுத்த எவ்வளவு தொகை தருவீர்கள் என்று இருக்கையில் அமர்ந்திப்பவருக்கும், இருக்கை சாயாமல் இருக்க பின்னால் இருக்கும் பயணி எவ்வளவு தொகை தருவார் என்று ஏலம் நிர்ணயம் செய்யப்பட்டது.

இதில் சாய்வு வசதியை பயன்படுத்த 41 டாலரும், சாயமால் இருக்க 18 டாலரும் வழங்குவதாக ஏலம் எடுக்கப்பட்டது. இதன் மூலம் மொத்தம் 21 சதவீத பயண நேரத்தில் இந்த பகுதியின் உரிமை கைமாறியது.

இதனால் பின்னால் இருக்கும் பகுதி முன் இருக்கையில் இருப்பவருக்கு தான் சொந்தம் என்று முடிவு செய்யப்பட்டது. எனினும் இந்த முடிவை ஏற்க சிலர் மறுத்தனர். முடிவில் சாய்வு வசதி இல்லாத இருக்கையை விமான நிறுவனங்கள் அமைப்பதே இதற்கு தீர்வு என்ற கருத்துக்கள் முன் வைக்கப்பட்டது.