சென்னை,
தமிழ்நாட்டில் பொறியியல் கட்டணம் உயர வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தேசிய அங்கீகார வாரியத்தின் சான்று பெற்ற சுயநிதி பொறியியல் கல்லூரிகளுக்கு அரசு ஒதுக்கீட்டு இடத்துக்கான ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.45,000 என்றும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 70 ஆயிரம் என்றும், சான்று பெறாத சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடத்துக்கான ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.40,000 என்றும் கடந்த 2013-14ம் கல்வி ஆண்டின்போது கட்டணமாக அரசு நியமனம் செய்தது.
அதன்பிறகு எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.
தற்போது நிர்வாக செலவுகள் அதிகரித்துள்ளதால், கல்வி கட்டணத்தை உயர்த்த தனியார் பொறியியல் கல்லூரிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.
அதைத்தொடர்ந்து இன்று கல்லூரி கட்டண நிர்ணய குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கான புதிய கல்வி கட்டணம் குறித்து அடுத்த வாரம் அறிவிக்கப்படும் எனவும், அப்போது நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கு கல்விக்கட்டணம் 70 ஆயிரத்தில் இருந்து 1 லட்சமாக உயர வாய்ப்புள்ளதாகவும் கோட்டை வட்டார தகவல்கள் கூறுகிறது.